சென்னை: டெல்லியில் கடந்த மூன்றாண்டில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் கடத்தப்பட்ட வழக்கில், தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவரை, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் இதுவரையில், இந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஐந்து பேரை கைது செய்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுமட்டுமல்லாது, இந்த போதைப்பொருள் கடத்தல் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருப்பதும், அதன் மூலம் படங்கள் தயாரிப்பு மற்றும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த வருவாயை யாருக்கெல்லாம் கொடுத்துள்ளார்கள், எந்தந்த தொழிலில் முதலீடு செய்து ள்ளார்கள், சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்பது குறித்து தொடர்ந்து அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஜாபர் சாதிக் உடன் திரைப்படத் தயாரிப்பில் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் தொழிலில் தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்டவர்களின் விவரங்கள் சேகரித்து, தொடர்ந்து அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், இயக்குநர் அமீரை கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து 11 மணி நேரம் விசாரணை செய்தனர். இந்த விசாரணைக்குப் பிறகு, மீண்டும் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் தெரிவித்து சம்மன் அனுப்பி உள்ளனர்.
அப்போது, கடந்த மூன்று ஆண்டுகளில் இயக்குநர் அமீர் பெயரில் என்னென்ன சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது, வங்கிக் கணக்கு ஆவணங்கள் மற்றும் ஜாபர் சாதிக் உடன் தொழில் ரீதியாக இணைந்தது எப்படி உள்ளிட்ட ஆவணங்களை 5ஆம் தேதி ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்ததாக தகவல் வெளியாகியது.
இந்த சூழலில், முறையான அனைத்து ஆவணங்களைக் கொண்டு வருவதற்கு இயக்குநர் அமீர் கால அவகாசம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில், மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், இயக்குநர் அமீருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய வருவாயை சட்டவிரோதமாகப் பணப் பரிமாற்றம் செய்தது மற்றும் சட்ட விரோதமாக முதலீடு செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், இன்று (ஏப்.09) காலை முதல் சென்னையில் உள்ள 35 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக, இயக்குநர் அமீரின் வீடு மற்றும் அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை - உச்ச நீதிமன்றம்!