தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்லையா என்ற நல்லையா (59), சரோஜா தம்பதியின் மகன் வேதநாயகம் துரை (38). 5 வருடங்களுக்கு முன்பு சரோஜா இறந்து விட்ட நிலையில், மகன் வேதநாயகம் துரை சென்னையில் வேலை பார்த்து வருகிறார். கூலி வேலை செய்து வரும் செல்லையா, வேலை பார்த்து விட்டு, இரவு நேரங்களில் சாத்தான்குளத்தில் உள்ள கரையடி கோயில் வளாகத்தில் படுத்து தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இரவு வழக்கம் போல கரையடி கோயில் வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோயில் முன்பு படுத்து தூங்கியுள்ளார். இரவு படுத்து தூங்கிக் கொண்டிருந்த செல்லையாவை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அவரது உடலை கோயில் வெளியே போட்டுச் சென்றுள்ள நிலையில், நேற்று காலை அந்த வழியாக வந்தவர்கள் செல்லையா கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, சாத்தான்குளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தான்குளம் போலீசார், செல்லையாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர் விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில், செல்லையாவின் மகன் வேதநாயகம் துரை தான் தந்தையை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார் என்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தப்பியோடிய செல்லையாவின் மகன் வேதநாயகம் துரையை பிடித்து விசாரணை செய்ததில் பல பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதில் "கடந்த 2 வாரங்களுக்கு முன்பு செல்லையாக்கு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதையடுத்து, மகன் வேதநாயகம் துரை சென்னையில் இருந்து ஊருக்கு வந்து, தந்தையை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை முடிந்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு தான் இருவரும் சாத்தான்குளம் வந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு மகன் துரை சென்னைக்கு கிளம்பியுள்ளார். அந்த நேரத்தில் செல்லையா தனது மனைவி சரோஜா குறித்து மகனிடம் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் இவருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து இரவு 12 மணி அளவில் செல்லையா எப்போதும் தூங்கும் இடமான கரையடி கோயிலுக்கு குடிபோதையில் சென்ற துரை, தனது தாயை எப்படி திட்டலாம் என்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், துரை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தந்தை செல்லையாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர், செல்லையாவின் உடலை கோயிலின் வெளியே போட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளார்.
சாத்தான்குளம் அருகே தாயை தரக்குறைவாக பேசிய தந்தையை மகன், கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாதம், இதே தூத்துக்குடி மாவட்டத்தில், மது அருந்தி விட்டு தாயிடம் தகராறு செய்த தந்தையை மகன், கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோயில் திருவிழாவுக்கு வந்த 17 வயது சிறுமிக்கு கூட்டுப்பாலியல் தொல்லை.. திருப்பூரில் நிகழ்ந்த கொடூரம்.. 7 பேர் அதிரடி கைது!