தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (50). கூலித் தொழிலாளியான இவருக்கு, இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மூத்த மகள் சினேகா என்பவருக்கு, கடந்த 2018ஆம் ஆண்டு பாரதி நகரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், சினேகாவின் கணவர் முத்துக்குமார் வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு, தினந்தோறும் மனைவியிடம் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தனக்கு பைக் வாங்க பணம் வேண்டும் எனக் கூறி, சினேகாவின் அப்பாவிடம் வாங்கி வரச் சொல்லி அடித்து கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சினேகாவின் தந்தை நாகராஜ் கோவில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அப்புகாரின் அடிப்படையில், காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், முத்துக்குமாரை பிணையில் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தனது மாமனார் வீட்டுக்குச் சென்ற முத்துக்குமார் அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் முத்துக்குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாமனார் கழுத்தில் வெட்டியதாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னர், ரத்த வெள்ளத்தில் கிடந்த நாகராஜன், உடனடியாக அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில், முத்துக்குமார் போலீசாருக்கு பயந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தற்போது, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இதையும் படிங்க: வீட்டில் கஞ்சா சோதனை நடத்த வந்த அதிகாரியிடம் தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது!