திருவள்ளூர்: தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று திருவள்ளூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களுக்கு மத்தியில் தன் கால்களுக்கு பொருத்தமான ஷூவை அணிந்து கொண்டு மோப்ப நாய் ஜான்சி சோதனையில் ஈடுபட்டது காண்போரை கவரும் வகையில் இருந்தது.
திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பெருமாள்பட்டு தனியார் பள்ளி வளாகத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்களை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று (மே 7) நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் வெடிகுண்டுகளை பரிசோதனை செய்யும் மோப்ப நாய்களும், காலவர்களுடன் இணைந்து இந்த ஆய்வின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தன. இந்த நிலையில், இன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மோப்ப நாய் ஜான்சி, சிவப்பு நிற ஷூ அணிந்தபடி வேகமாக வீரநடை போட்டு சோதனையில் ஈடுபட்டு வந்தது.
தற்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், மக்கள் அதனை உணவுப் பொருட்கள் மூலமாகவும், குடை, தொப்பி ஆகியவற்றை அணிந்தும் தங்களை தற்காத்துக்கொள்கின்றனர். ஆனால், விலங்குகள் இந்த காலநிலை மாற்றங்களையும், அதிக வெப்பத்தையும் எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றன.
இந்நிலையில், மோப்ப நாய்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு, மோப்ப நாய் ஜான்சிக்கு கால்களில் அழகான ஷூக்கள் போடப்பட்டு அழைத்து வரப்பட்டது, காண்போரைக் கவரும் வகையில் இருந்தது. இது குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், “வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜான்சிக்கு ஷூக்கள் போடப்பட்டுள்ளது. இதனால் அவர் ஷூக்களை போட்டுக்கொண்டு தன்னுடைய வேலைகளைை பக்குவமாக பார்த்து வருகிறார்” எனக் கூறினர்.