தேனி: தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள மகாலட்சுமி நகரில் சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் குடியிருந்து வரும் சதாசிவம் என்பவரது வீட்டிற்கு அருகே இருக்கும் நிலப்பரப்பில் இன்று காலை இரண்டு கொடிய விஷத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்புகள் ஒன்றாக சுற்றித் திரிந்துள்ளன.
அவற்றை கண்ட ஆறு வயது சிறுமி அச்சத்தில் கூச்சலிட்டுள்ளார். இதை கேட்டு சதாசிவம் மற்றும் அப்பகுதி மக்கள் அந்த இரண்டு பாம்பையும் கண்ட நிலையில், உடனடியாக போடிநாயக்கனூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் படை வீரர்கள் குடியிருப்புகளுக்கு அருகே சுற்றித் திரிந்த இரு கண்ணாடி விரியன் பாம்புகளையும் உயிருடன் லாவகமாக பிடித்து வனப் பகுதிக்குள் கொண்டு சென்றனர்.
காலை பொழுதில் குடியிருப்புகளுக்கு அருகே உலா வந்த கண்ணாடி விரியன் பாம்புகளால் மகாலட்சுமி நகர் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: தேனியில் நீளும் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விவகாரம்.. மேலும் 3 இளைஞர்கள் அதிரடி கைது!