திருச்சி: திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, வியட்நாம், தோஹா உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும், சென்னை, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கும் உள்நாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் வந்துள்ளது. அப்போது, விமானத்தில் வந்த பயணி ஒருவர் தங்கத்தை நூதன முறையில் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனால், விமான நிலையம் முழுவதும் அதிகாரிகள் பயணிகள் உடைமைகளை மிகவும் கவனமுடன் சோதனை செய்துள்ளனர். அதில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது, பயணி ஒருவர் தனது தொடை பகுதியில் (knee cap ) நீ கேப் போன்று அணிந்து, அதில் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்துள்ளது.
மேலும், அவரது உடமைகளில் துணிகளுக்கு நடுவில் தங்கச் சங்கிலிகளை மறைத்து எடுத்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்த பயனியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த பயணி எடுத்து வந்த மொத்த தங்கத்தின் மதிப்பு 1 கோடியே 3 லட்சத்து 13 ஆயிரத்து 257 ரூபாய் ஆகும். அதேநேரம், அவர் கடத்தி வந்த தங்கத்தின் எடை 1 கிலோ 423.500 கிராம் ஆகும்.
இதையும் படிங்க: சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் பறிமுதல்.. சென்னை விமான நிலையத்தில் சிக்கிய பெண்ணின் பின்னணி என்ன?