விருதுநகர்: சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் கடந்த ஜுன் 18ஆம் தேதி மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணியின் போது சுடு மண்ணாலான புகைப்பிடிப்பான் கருவி மற்றும் சுடுமண் குழாய் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக, சங்கு வளையல்கள் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தது. மேலும், நாயக்கர் கால செம்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டது. இந்த நாணயம் கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மதுரை நாயக்க மன்னரான வீரப்ப நாயக்கர் காலத்தில் புழக்கத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நாணயத்தின் முன் பக்கத்தில் சிவபெருமான் அமர்ந்த நிலையிலும், பின்பக்கத்தில் “ஶ்ரீ வீர” என்ற தெலுங்கு எழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. பரவலாக காணப்படும் இவ்வகை காசுகளில் பொதுவாக சிவபெருமானின் அருகே பார்வதி தேவி அமர்ந்த நிலையில் காணப்படும். ஆனால், இக்காசில் சிவபெருமானின் திருவுருவம் மட்டும் காணப்படுகிறது.
இதற்கு முன்னதாக மாவு கல்லால் ஆன கழுத்தில் அணியக்கூடிய அணிகலனில் கீழே கோர்க்கப்படும் தொங்கணி கண்டறியப்பட்டுள்ளது. இதனின் தலைப்பகுதியில் அணிகலனுடன் கோர்ப்பதற்கான துளையிடப்பட்டுள்ளது. இந்த சிறிய அணிகலன் 14.6 மில்லி மீட்டர் நீளமும், 4.2 மில்லி மீட்டர் சுற்றளவும், 30 மில்லி கிராம் எடை கொண்ட பச்சை நிறத்தில் கூம்பு வடிவிலான சிறிய அணிகலனாகும்.
விதவிதமாக பொருட்கள்: மூன்றாம் கட்ட அகழ்வாய்வில் இதற்கு முன்னதாக 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மனிதர்கள் பயன்படுத்திய சங்கு வளையல்கள் மற்றும் கழுத்தில் அணியும் சுடு மண்ணால் ஆன பதக்கம், கண்ணாடி மணிகள், கல்மணிகள் மற்றும் பழங்கால செங்கற்கள், சிகை அலங்காரத்துடன் பாவையின் தலைப்பகுதி, அலங்கரிக்கப்பட்ட சுடுமண் அகல்விளக்கு, சுடு மண்ணாலான கூம்பு வடிவ கிண்ணத்தின் அடிப்பகுதி, சதுரங்கம் விளையாடும் ஆட்டக்காய், சில்வட்டு, எலும்புகள் மற்றும் பானை ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
குறிப்பாக, இந்த 3ஆம் கட்ட அகழ்வாய்வில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் அகழாய்வு இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். முதல்கட்ட அகழ்வாய்வில் 3 ஆயிரத்து 254 பொருட்களும், 2-ம் கட்ட அகழாய்வில் 4 ஆயிரத்து 660 பொருட்கள் குறிப்பாக தங்கம், சுடுமண் பொம்மைகள், பாசிமணிகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்