விருதுநகர்: பட்டாசு ஆலைகளில் ஏற்படும் தொடர் வெடி விபத்துகளைத் தடுப்பது குறித்து வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் சிவகாசி பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
சிவகாசியில் இயங்கி வரும் தமிழ்நாடு கேப் வெடி மற்றும் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கணேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மத்திய வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறையின் சிவகாசி கிளையில் சார்பில் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. 2008-ல் உயிரிழப்பு இல்லாமல் பட்டாசு உற்பத்தி இருந்தது.
இதே போன்று இனிவரும் காலத்திலும் பட்டாசு உற்பத்தியின் போது உயிரிழப்புகள் ஏற்படாதவாறு இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பட்டாசு தொழிலைப் பாதுகாக்க பல்வேறு நடவடிகைகளை எடுத்து வருகிறது. தொடர் விபத்து பட்டாசு தொழில் மீது ஒரு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்படும்.
போர்மென்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். விபத்து இல்லாமல் பட்டாசுகளை உற்பத்தி செய்ய உறுதி மொழி எடுத்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் ஒவ்வொரு 2 மாதத்துக்கு ஒரு முறை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி எங்களுக்கு உறுதி ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள 3 லட்சம் மக்கள் பட்டாசு தொழிலில் நேரடியாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இதையும் படிங்க: பட்டாசு ஆலை வெடிவிபத்து: 'விதிகளை மீறினால் குண்டாஸ் பாயும்' - விருதுநகர் கலெக்டர் எச்சரிக்கை - Sivakasi Firecracker Explosion
கோடைக்காலம் என்பதால் முதல்கட்ட பணிகளை காலை 6 மணிக்கு தொடங்கி 9 மணிக்குள் முடிக்க முடிவு செய்து அதன்படி, பணிகள் நடந்து வருகிறது. தவிர்க்க முடியாத நிலையில் சில நேரங்களில் இதுபோன்ற பெரிய அளவிலான விபத்துக்கள் நடக்கிறது. இதை முற்றிலும் தவிர்க்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். எங்கள் சங்கங்களில் உறுப்பினராக உள்ள பட்டாசு ஆலைகளில் விபத்துகள் தவிர்க்கப்படுகிறது. இதைப் பதிவு செய்வதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.
சங்க உறுப்பினர்களுக்கு மூலப்பொருட்களின் தரம் குறித்து உண்மை தகவல்களை தெரிவித்து வருகிறோம். இதனால், பல இடங்களில் விபத்துக்கள் தவிர்க்கப்படுகிறது. விதிகளை முறையாக கடைபிடிக்கும் இடத்தில் விபத்துக்கள் நடப்பது இல்லை. விதிகளை மீறி பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டால் மட்டுமே விபத்துக்கள் நடக்கிறது. எனவே, விதிகளை மீறுபவர்கள் மீது அரசு எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கிறோம்.
கடந்த 15 ஆண்டுகளில் விதிமீறல்கள் காரணமாகவே அதிகளவில் வெடி விபத்துக்கள் நடந்துள்ளது. அதே நேரத்தில் அரசும் அனைவரது மீதும் நடவடிக்கை என்று கூறவில்லை. விதிகளை மீறுபவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பட்டாசு ஆலைகளை குத்தகை விடுவதன் மூலம் தான் அதிக விபத்துக்கள் நடக்கிறது. இதைத் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.