மதுரை: தை திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றன. காலை 8 மணி அளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்தவுடன் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடி ஆர் பழனிவேல் தியாகராஜன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தளபதி, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எட்டு தகுதிச் சுற்றுகள் மற்றும் இறுதிச் சுற்று என மொத்தம் ஒன்பது சுற்றுக்களாக நடைபெற்ற போட்டிகளில் மொத்தம் 1,100 காளைகளும், 370க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் களமாடினர்.
தகுதிச்சுற்று போட்டிகளில் வென்று மொத்தம் 30 மாடுபிடி வீரர்கள இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். இப்போட்டியில் 20 காளைகளைப் பிடித்த சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபிசித்தர் என்ற மாடுபிடி வீரர் முதல் பரிசை தட்டிச் சென்றார். அவருக்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கை சார்பாக கன்றுடன் கூடிய கறவை பசுவும் வழங்கப்பட்டது
2ஆம் இடம் பிடித்த மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் ஸ்ரீதர் 14 காளைகளைப் பிடித்து ஆட்டோ வாகனத்தை பரிசாக வென்றார்.
3ஆம் இடம் பெற்ற சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் விக்னேஷ் 10 காளைகளைப் பிடித்து பைக்கை பரிசாக வென்றார்.
4ஆம் இடம் பிடித்த சிவகங்கை மாவட்டம் ஏனாதியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அஜய் 9 காளைகளைப் பிடித்து டிவிஎஸ் எக்ஸ்..எல். இருசக்கர வாகனத்தைப் பரிசாக வென்றார்.
சிறந்த காளை: சிறந்த காளைக்கான முதல் பரிசு சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினத்தைச் சேர்ந்த பாகுபலி மாட்டின் உரிமையாளருக்கு வழங்கப்பட்டது. அவருக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சார்பில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. அத்துடன் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் வீரராகவன் சார்பில் கன்றுடன் கூடிய கறவை பசுவும் பரிசாக அளிக்கப்பட்டது.
2ஆம் இடம் பிடித்த எரசக்கநாயக்கனூர் வக்கீல் பார்த்தசாரதி மாட்டுக்கு திமுக மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.பி.ராஜா சார்பில் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
3ஆம் இடம் பெற்ற புதுக்கோட்டையை சேர்ந்த கண்ணன் என்பவரின் காளை ஸ்கூட்டர் வாகனத்தை பரிசாக வென்றது.
4ஆம் இடம் பிடித்த இலங்கையைச் சேர்ந்த செந்தில் தொண்டைமான் காளைக்கு லோடு பைக் பரிசாக வழங்கப்பட்டது.
பரிசுகளை தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் இணைந்து வழங்கினர்.
முன்னதாக, 10 தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெறும் என்றும், ஒவ்வொரு சுற்றிலும் முன்னிலை பெற்றவர்கள் பதினோராவதாக நடைபெறும் இறுதிச்சுற்றில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேரம் குறைவு காரணமாக மொத்தம் ஒன்பது சுற்றுகளே போட்டிகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.