புதுக்கோட்டை: சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் செயல் வீரர் கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி பாஜக கூட்டணி கட்சி வேட்பாளரான தேவநாதன் யாதவ் பங்கேற்று பரப்புரையாற்றினார்.
புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், செயல்வீரர்கள், பாஜக கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் பேசியதாவது,"தேவநாதன் என்பவர் சிவகங்கைக்குப் புதியவர் என்று கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்திருக்கிறார். நான் சிவகங்கைக்குப் புதியவன் என்றால் ஏன் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார்? என்று கேள்வி எழுப்பினார்.
என்னை புதியவர், வெளியூர்க்காரர் என்று விமர்சிக்கும் கார்த்தி சிதம்பரம், எத்தனை முறை தொகுதிக்கு வந்தார் என்பது தெரியாது. உங்களை விட சிவகங்கைத் தொகுதியில் அதிகம் பயணம் செய்தவன் நான். எனது தேசிய மக்கள் கல்விக் கழகத்தில் இருந்து 2011ல் வேட்பாளர்களை நிறுத்தி சிவகங்கை, காரைக்குடி, திருமயம் மற்றும் திருப்பத்தூர் தொகுதிகளில் சட்டமன்றத் தேர்தலில் மூன்றாம் இடம் பெற்றேன்.
இது ஜனநாயகத்திற்கும், பணநாயகத்திற்கும் நடக்கின்ற தேர்தல். இதில் ஜனநாயகம் வெற்றி பெற வேண்டுமானால் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை வெற்றியடையச் செய்ய வேண்டும். சிவகங்கை தொகுதியில், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட எந்த ஒரு பணியையும் அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஏற்படுத்தவில்லை.
அதேபோல்தான் அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் தொகுதிக்கு எதையும் செய்யவில்லை, இருவரும் ஓட்டுப் போட்ட மக்களை ஏமாற்றிவிட்டனர்" என்றார். தொடர்ந்து பேசிய அவர்,"வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் கதிர் ஆனந்த், மகளிர் உரிமைத் தொகை குறித்து கொச்சைப்படுத்தியும் பேசியுள்ளார்.
அதேபோல், அமைச்சராக உள்ள பொன்முடி 'ஓசி பஸ்' என பெண்களை கொச்சைப்படுத்தி பேசினார். இந்த திட்டங்களுக்கான பணத்தை கோபாலபுரம் வீட்டை அடகு வைத்து செய்தீர்களா? இது மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டம்.
திமுக ஆட்சியில் தமிழகம் கஞ்சா உள்ளிட்ட போதைகளில் திளைத்து வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற உடன் மதுக்கடைகளை படிப்படியாகக் குறைப்பதாக சொன்னார்கள். ஆனால் இதுவரை அதற்காக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் எங்குப் பார்த்தாலும் கஞ்சா பறிமுதல் என்ற செய்தி வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழை வளர்க்கிறோம் என்று கூறி அழித்து வருகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: களத்தில் நிற்க முடியாமல் வேட்புமனுவை நிராகரிக்க கலெக்டர் ஆபிஸில் சுத்தும் கும்பல்: அண்ணாமலை விமர்சனம்!