புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், பெருங்காடு கிராமத்தைச் சேர்ந்த அபிநவ் கிருஷ்ணா என்ற இளைஞர் பி.இ, எம்.பி.ஏ முடித்துவிட்டு சிங்கப்பூர் நாட்டில் தனியார் நிறுவனத்தில் கடந்த 6 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அபிநவ் கிருஷ்ணா-விற்கும் அறந்தாங்கியைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண்ணிற்கும் நேற்று பட்டுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில், அபிநவ் கிருஷ்ணா மேலாளராக பணியாற்றும் சிங்கப்பூர் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்கள் காலின் என்சி, கான் மிங்க் ஆகிய இருவரும் அன்பின் பால் அழைப்பின் பேரில் வருகை தந்தனர்.
சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த உரிமையாளர்களுக்கு அபிநவ் கிருஷ்ணாவின் குடும்பத்தினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அதன்படி, அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே இருந்து - மண்டபம் வரை குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் உரிமையாளர்களை உற்சாகமாக அழைத்து வந்து ஆரத்தி எடுத்து சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க : வேலூர் ஆர்ப்பாட்டத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு சிக்கன் பிரியாணி? - போலீஸ் மீது இந்து முன்னணி பரபரப்பு குற்றச்சாட்டு!
அதன் பின்பு உரிமையாளர்கள் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தனர். இந்த காட்சி திருமண விழாவிற்கு வருகை தந்தவர்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி அங்கு வந்த மக்கள் மற்றும் உறவினர்கள் சிங்கப்பூர் உரிமையாளர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
தனது நிறுவனத்தில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளியின் இல்லத் திருமண விழாவிற்கு நேரில் வந்து வாழ்த்திய சிங்கப்பூர் முதலாளிகளின் செயலும், அவரை வரவேற்ற மணமகனின் குடும்பத்தினரின் நேசமும் காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிகழ்ச்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.