விழுப்புரம்: மரக்காணம், புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற மஞ்சனிஸ்வரர் ஐயனார் கோயில் அருகே, ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான வானவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று காலை வழக்கம் போல் வெடி பொருட்களை உலர வைக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது மதியம் 1 மணியளவில், அதிக வெயில் காரணமாக உலர வைக்கப்பட்ட பட்டாசுகளில் தீ பற்றி வெடித்து சிதறியது. இதனைக் கண்ட பணியாளர்கள் அலறியடித்து ஓடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து, தீ விபத்தில் சிக்கிய பட்டாசு ஆலை உரிமையாளர் ராஜேந்திரனை மீட்டு, சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும், பட்டாசு ஆலையில் வேலை செய்த ஆண்டாள் (35), கவுரி (35) ஆகிய இரு பெண்களும் இத்தீ விபத்தில் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு, மூன்று பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்த்தியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் தமிழ்நாடு அரசு விதித்துள்ள நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டவில்லை எனவும், காவல் ஆய்வாளர் மற்றும் வருவாய்த்துறையினர் முறையாக பட்டாசு ஆலைகள் விதிமுறைகளைப் பின்பற்றுவது குறித்து கண்காணிக்கத் தவறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேற்று சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கோர வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மரக்காணத்தில் உப்பு உற்பத்திக்கான முதல்கட்டப் பணிகள் துவக்கம்! - First Phase Work Start On Uppalam