சேலம்: சேலம் - கோவை இடையேயான தேசிய நெடுஞ்சாலையில், இன்று (புதன்கிழமை) காலை கண்டெய்னர் லாரி ஒன்று முன்னே சென்று கொண்டிருந்த டிராக்டர் மற்றும் கார் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிராக்டரை ஓட்டிச் சென்ற மல்லசமுத்திரத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், விபத்தில் சிக்கிய கார் நொறுங்கியதில், காரில் பயணம் செய்த சிறுவன் உள்பட ஐந்து பேர் காரை விட்டு வெளியே வர முடியாமல் திணறினர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்களின் உதவியோடு காருக்குள் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், கார் மிகவும் சேதமடைந்து இருந்ததால், உள்ளே சிக்கி இருந்தவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து, ஜேசிபி வாகனம் வரவழைக்கப்பட்டு, காரில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பதும், மது போதையில் வாகனத்தை அதிவேகமாக இயக்கியதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானதும் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து காரணமாக, சேலம் - கோவை இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, விபத்தில் சிக்கிய வாகனங்களை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், கண்டெய்னர் லாரி கார் மற்றும் டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: வீட்டிற்குள் புகுந்த 5அடி நீளமுள்ள சாரைப்பாம்பு: லாவகமாக பிடித்த பாம்பு பிடி வீரர்