செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணித்த நிலையில், பேருந்து லாரியில் உரசி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுநாகலூர் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. மதுராந்தகம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ராமாபுரம், மோகல்வாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்த வகையில், இன்று (மார்ச் 12) வழக்கம்போல் மாணவர்கள் கல்லூரிக்கு தனியார் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியவாறு சென்று கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, மாணவர்கள் தொங்கியபடி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை முந்திய கண்டெய்னர் லாரி, தனியார் பேருந்தில் உரசியதில், பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மோனிஷ், கமலேஷ், தனுஷ் ஆகிய மூன்று கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ரஞ்சித் என்ற மாணவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த பயங்கரமான விபத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/dv0b0H69k3
— TN DIPR (@TNDIPRNEWS) March 12, 2024
தமிழக முதலமைச்சர் நிவாரணம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அது தொடர்பாக செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், சிறுநாகலூர் கிராமம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று 12.3.2024 காலை தொழுப்பேடுவிலிருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில், பேருந்தில் பயணம் செய்த மதுராந்தகம் தனியார் கல்லூரியில் பயின்றுவரும் மாணவர்கள் தனுஷ் (வயது 21) த/பெ.முனியப்பன், கமலேஷ் (வயது 19) த/பெ.முருகேசன் மற்றும் மோனிஷ் (வயது 19) த/பெ.சிவகுமார் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிழிந்தனர்.
மேலும், இவ்விபத்தில் ரவிச்சந்திரன் (வயது 20) த/பெ.குணசேகரன் என்பவர் மதுராந்தகம் அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவர்களின் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறன். ஈடுசெய்ய முடியாத இந்தப் பேரிழப்பு நம் அனைவருக்கும் ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்" என உத்தரவிட்டுள்ளார்.
பேருந்தின் படிக்கட்டில் பயணிக்காதீர்கள்: 'படியில் பயணம் நொடியில் மரணம்' எனப் பேருந்துகளில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள், நமக்கு நமது உயிரின் அருமையை எடுத்துரைப்பவையாகும். இந்த உண்மையை உணர்ந்து, இனிமேலாவது பேருந்தின் படிக்கட்டுகளின் யாரும் பயணிக்காமல் இருக்கவேண்டும்.
இதையும் படிங்க: கன்னியாகுமரியில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு