சேலம்: தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை அலுவலகம், சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி 13 பெண்கள் உட்பட 25 பணியாளர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று (ஆக.16) தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காமல் பட்டு வளர்ச்சித்துறை நிர்வாகம், தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சித் துறையின் பணியாளர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பட்டு வளர்ச்சித்துறை நிர்வாகம் அரசுக்கு எதிராக செயல்படுகிறது. அந்த வகையில், 13 பெண்கள் உட்பட 25 பணியாளர்களுக்கு சுமார் 300 கிலோ மீட்டருக்கும் மேலாக உள்ள உடுமலைப்பேட்டை, தாளவாடி, ஓசூர், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதன் காரணமாக மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், இளம் பெண்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். மேலும், பெண்கள், கர்ப்பிணிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மாற்றுத்திறனாளிகள் இது போன்ற தொலைவில் சென்று பணியாற்ற முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.
எனவே, தொலைதூரம் பயணித்து பணிகளை மேற்கொள்ள முடியாது என்பதை வலியுறுத்தி பலமுறை பணியிட மாறுதலை திரும்பப் பெற வேண்டும் என்று கூறி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பணியாளார்காள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், தற்போது வரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வருகின்றனர்.
ஆகையால், உடனடியாக இந்தப் பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மறுக்கும் பட்சத்தில், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தவும், பட்டு வளர்ச்சி நிர்வாகத்தின் மீது பொதுநல வழக்கு தொடரவும் தயாராக உள்ளோம்" என்றும் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: “ஆண்ட்ராய்டு ஆப் மூலம் அரிசி வழங்கும் திட்டம்”- ராதாகிருஷ்ணன் தகவல்!