சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் தரப்பில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்து வந்த நிலையில் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டு வந்தது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி 471 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த செப்.26ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தால் அவருக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டது. மேலும் தேவையில்லாத காரணங்களுக்காக வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக் கோரினாலோ சாட்சிகளை கலைக்க முற்பட்டாலோ ஜாமின் ரத்து செய்யப்படும் என பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது.
மேலும் வாரத்தில் இரண்டு நாட்கள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன் அடிப்படையில் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி கடந்த வெள்ளிக்கிழமை (செப்.27) சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள அமலாக்கதுறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்திட்டார்.
இதையும் படிங்க: தமிழக அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தினர் அதிகரிப்பு.. அரசியல் பின்னணி என்ன?
இந்த நிலையில் திங்கட்கிழமையான இன்று இரண்டாவது முறையாக செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார். மேலும் அவர் நேற்று மீண்டும் தமிழ்நாடு அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆனால் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள அரசு வாகனத்தில் வராமல் தனது சொந்த காரில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்து விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்திட்டு விட்டு காரில் இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றார். மேலும் அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு செந்தில் பாலாஜி வருகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்