சென்னை: முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்த நிலையில் அந்த ஜாமீன் மனுக்களை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டு வந்தது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி 471 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து நேற்று (செப்.26) உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டது. அந்த நிபந்தைனைகளுள் தேவையில்லாத காரணங்களுக்காக வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக் கோரினாலோ, சாட்சிகளை கலைக்க முற்பட்டாலோ ஜாமின் ரத்து செய்யப்படும் என பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: "செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானால் தமிழ்நாட்டிற்கு நல்லது".. கரூர் எம்.பி.ஜோதிமணி!
மேலும் வாரத்தில் இரண்டு நாட்கள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர், அதன் அடிப்படையில் நேற்று சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த நிலையில் இன்று (செப்.27) காலை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள அமலாக்கதுறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் விளக்கம் அளித்து கையெழுத்திட்டார்.
மேலும் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு செந்தில் பாலாஜி வருகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்