சென்னை: கடந்த 2011 - 2015ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
செந்தில் பாலாஜி உள்பட 47 பேருக்கு எதிரான இந்த வழக்கு, சென்னை எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி இருந்தனர். அவர்களுக்கு வழக்கு தொடர்பான கூடுதல் குற்றப் பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக 2,202 பேர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 100 பேர் வீதம் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்படும் எனவும், நகல்கள் வழங்கி முடித்த பிறகு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்த நீதிபதி ஜெயவேல், வழக்கின் விசாரணையை அக்டோபர் 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.