சென்னை: காங்கிரஸ் மூத்தத் தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் காலமானார். இந்த தகவலை மியாட் மருத்துவமனை உறுதி செய்துள்ளது.
சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இவர், தனது 75-ஆவது வயதில் இன்று காலை 10:12 மணியளவில் காலமானார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. ராமாபுரத்தில் உள்ள மின் மயனாத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடன் அடக்கம் செய்யப்படும் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலை மியாட் மருத்துவமனையில் வயது சார்ந்த உடல்நலக்குறைவால் காலமானார். தீவிரமான அரசியல் வாழ்க்கை கொண்ட இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், காங்கிரஸ் அரசு காலத்தில் மத்திய நெசவுத் துறை அமைச்சராகவும் இருந்தவர்.
இவர் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை பெரியார் ஈ.வி.ராமசாமியின் அண்ணன் கிருஷ்ணசாமியின் பேரனும், திராவிட இயக்க முன்னோடியாக விளங்கிய ஈ.வி.கே. சம்பத்தின் மகனுமாவார். திராவிடக் கோட்பாட்டின் பின்னணியிலிருந்தாலும், இளங்கோவன் காங்கிரஸில் இணைந்து அதன் மதச்சார்பற்ற தேசியக் கொள்கைகளுடன் இயைந்து பணியாற்றினார்.
1948 ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று ஈரோட்டில் பிறந்த இளங்கோவன், நீண்ட அரசியல் பயணத்தில் முக்கிய பதவிகளை வகித்தார். கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியின் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பின்னர் 2023 இல் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்வானார். அவரது மகன் திருமகன் ஏவறா மறைவையடுத்து நடந்த இடைத்தேர்தலின் வாயிலாக அவர் மீண்டும் சட்டப்பேரவைக்குள் நுழைந்தார்.
தமிழ்நாட்டு அரசியலில், திராவிடம் மற்றும் தேசிய அரசியலின் இடையே பாலமாக செயல்பட்ட இளங்கோவனின் பங்களிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தது அவரது மறைவு தமிழ்நாடு அரசியல் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கே பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.