சென்னை: ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைமையிடமான சத்தியமூர்த்தி பவனில், கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "3 ஆண்டுகள் முடிந்து, 4வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் திமுகவிற்கும், தொடர்ந்து மக்களுக்காக சிறப்பான ஆட்சியை செய்து கொண்டு இருக்கும் முதலமைச்சருக்கும் வாழ்த்துக்கள்.
எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தேர்தல் வாக்குறுதியில் கூறாமலே செய்திருக்கிறார்கள். குறிப்பாக, காலை உணவுத் திட்டம் தெலங்கானாவிலும், சில உலக நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
தொடர்ந்து நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "ஜெயக்குமார் மரணத்தில் அரசியல் செய்வதை நாங்கள் விரும்பவில்லை, புலன் விசாரணைக்குப் பிறகு எங்களது கருத்துகளை தெரிவிப்போம். காவல்துறை அவர்களது பணியை மேற்கொண்டு வருகிறார்கள்" என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "50 ஆண்டுகள் முடிந்த கச்சத்தீவு விவகாரம் குறித்து தற்போது பாஜகவினர் பேச என்ன காரணம்? கச்சத்தீவு விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால், நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என சொல்லும் மத்திய அரசு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மட்டும் எப்படி அந்த ஆவணங்களைக் கொடுத்தனர்?
ஒரு பொய்யான தகவல் வெளியுறவுத் துறை அமைச்சர் பொதுவெளியில் பேசுகிறார், பிரதமர் அந்த கருத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்கிறார். ஒரு தலைவர் எப்படி இதை செய்ய முடியும்? பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் அநாகரிகமான செயல்களைச் செய்யலாமா?" என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், "10 ஆண்டுகளில் அதிமுக கடன் சுமையைத் தான் வைத்து விட்டுச் சென்றுள்ளது. ஆனால், திமுக கடன் சுமையில் ஆட்சி அமைத்தும், கொடுத்த வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றி உள்ளனர். திமுகவை பாராட்ட வேண்டிய இடத்தில் காங்கிரஸ் பாராட்டுகிறது. சுட்டிக்காட்ட வேண்டிய இடத்தில் சுட்டிக்காட்டுகிறது.
வெளி நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் போதைப் பொருட்கள் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு மத்திய அரசின் பாதுகாப்பு நிறுவனங்களின் தோல்வியே காரணம். இருந்தாலும், தமிழ்நாட்டிற்குள் வரும் போதைப் பொருட்களைத் தடுக்க வேண்டும். அதானி துறைமுகத்தில் எத்தனை லட்சம் கோடி போதைப் பொருள் பிடித்து உள்ளார்கள்?
அது அனைத்தும் எங்கு உள்ளது, அதானி துறைமுகம் வழியாக தான் போதைப் பொருள் உள்ளே வருகிறது. தமிழ்நாடு இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. அதன் மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காமராஜர் நினைவிட விவகாரம்.. செல்வப்பெருந்தகை மீது தமிழிசை காட்டமான விமர்சனம்!