சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய செல்வப்பெருந்தகை, "காவல்துறையில் சில மாற்றங்கள் கொண்டு வந்துள்ளனர். சென்னையின் புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் பொறுப்பேற்க உள்ளார். மேலும், கூடுதல் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக டேவிட்சன் ஆசீர்வாதம் பொறுப்பேற்கவுள்ளார். அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனிவரும் காலங்களில் அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படாத வகையில், குற்றங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோளையும் வைக்கின்றோம். கடந்த 3 நாட்களாக ஏற்பட்ட அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. பாஜக ஊழலிலேயே திளைத்து, நிதி நிறுவனங்களை அவர்களுக்கு வேண்டிய ஆட்கள் மூலம் தங்கள் வசம் பயன்படுத்திக் கொள்வது, ஆசை வார்த்தை காட்டி ஏழை எளிய கிராமப்புற மக்களை ஏமாற்றுபவர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பது தான், பாஜக.
வெகுஜன மக்களை ஏமாற்றி, ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொள்ளையடித்து வந்தால், அவர்களுக்கு கட்சியிலே பொறுப்புகள் கொடுத்து, ஆதரித்து, தைரியம் கொடுப்பது, இதுதான் பாஜகவின் சித்தாந்தமாகத் தமிழ்நாட்டில் உள்ளது. ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் முதல் அறிக்கை பதிந்த பிறகும், பாஜக விளையாட்டுத்துறையில் அவர்களை விளையாட்டாகச் சேர்த்து, வெகுஜன மக்களின் விரோதத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அவர்களுடைய அதிகாரமும், ஏமாற்றுப் பணமும் எதுவரை பாய்ந்திருக்கிறது என்றால், மத்திய அமைச்சரை சந்திக்கிறார்கள்; பிரதமருடைய கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இது எல்லாம் எதைக் காட்டுகிறது என்றால், ஏழை எளிய மக்களிடம் கொள்ளையடியுங்கள், ஏமாற்றுங்கள் நாங்கள் உங்களை காப்பாற்றுகிறோம்.
'ஆம்ஸ்ட்ராங் படுகொலை பின்னணியில் ஆருத்ரா கோல்டு' - செல்வப்பெருந்தகை: ஆனால், 2 தினங்களுக்கு முன்பு நடந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், இந்த தங்க நிறுவனத்தின் பெயர் அடிபடுகிறது. இதை மையப்படுத்தித்தான் புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இதில் உள்ள தலையீடுகளை தீர விசாரிக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் படுகொலை எல்லா அரசியல் கட்சித் தலைவர்களுக்குமான எச்சரிக்கை. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் மாயவதி சி.பி.ஐ (Armstrong Murder case) விசாரணை கோருவது அவரது உரிமை.
காவல்துறை இந்த வழக்கை ஒரே கோணத்தில் விசாரிக்காமல், ஆருத்ரா கோல்டு நிறுவனத்தையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். பல கோணங்களில் விசாரணை செய்ய வேண்டும். இனிமேலும், இதுபோன்ற படுகொலைகளை நடைபெறாமல் அரசு பாதுகாக்க வேண்டும். குற்றங்கள் இல்லாத மாநிலமாகத் தமிழ்நாடு மாற வேண்டும். அதற்கு, புதிய ஆணையர் பல கோணங்களில் நேர்மையாக விசாரணையை நடத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசு சட்ட ஒழுங்கை அரசு உறுதி செய்ய வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும். காவல் அதிகாரிகள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள், புதிதாக பொறுப்பிற்கு வருபவர்களுக்கு வாழ்த்துக்கள். இனிவரும் காலங்களில் அரசுக்குக் கெட்ட பெயரும், குற்றம் நிகழாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.