சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், "பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு கோரமண்டல் ரயில் விபத்து உள்ளிட்ட தொடர் விபத்துக்கள் நடைபெற்று வருவதாகவும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் இதனை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ரயில்வே துறைக்கு வழங்கப்படும் நிதியை பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு பயன்படுத்தாமல் சுற்றுலா, மாளிகை மற்றும் பங்களா கட்டுவதற்கு பயன்படுத்துகிறார்கள் என்று சி.ஏ.ஜி. அறிக்கை சொல்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மம்தா பானர்ஜி, நிதீஷ் குமார் உள்ளிட்டவர்கள் ரயில்வே துறை அமைச்சர்களாக இருந்தபோது விபத்து நேரிட்ட உடன் துறையிலிருந்து ராஜினாமா செய்ததாகவும் ஆனால் பா.ஜ.க அமைச்சர்கள் ஏன் விபத்து நடந்தவுடன் பதவியை ராஜினாமா செய்யவில்லை எனவும் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார்.
சென்னை சி.ஐ.டி. நகர் முதல் தி.நகர் வரை உள்ள மேம்பாலத்திற்கு தியாக சீலர் கக்கன் மேம்பாலம் என்று பெயர் வைக்க முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கிறோம். வருகிற 22 அல்லது 23 ஆம் தேதி விக்கிரவாண்டியில் காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் நடத்த இருக்கிறோம் என்றும், தி.மு.க இந்த தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பா.ஜ.க, பா.ம.கவை மறைமுகமாக ஆதரிக்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க விக்கிரவாண்டி தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் பா.ம.க, பா.ஜ.க.விற்கு "பி" டீமாக தான் அதிமுக உள்ளது எனவும் அவர் விமர்சித்தார்.
கர்நாடகாவை சேர்ந்த சோமண்ணா மத்திய அரசின் ஜல் ஜீவன் அமைச்சராக பதவியேற்றுள்ளது ஏற்கெனவே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது வன்மையாக கண்டிக்கதக்கது" என்றும் செல்வப்பெருந்தகை கூறினார்.
இதனைதொடர்ந்து, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி - அமைச்சர் எல்.முருகன் கூறிய காரணம் என்ன?