சென்னை: சிங்கப்பூரிலிருந்து பெரிய அளவில் சென்னைக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு நேற்று (சனிக்கிழமை) தகவல் கிடைத்துள்ளது. இதை அடுத்து, சுங்க அதிகாரிகளின் தனிப்படையினர், நேற்று காலையில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை நாடுகளிலிருந்து சென்னை வந்த அனைத்து விமானப் பயணிகளையும் தீவிரமாக கண்காணித்துக் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், நேற்று மாலை சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் கண்காணித்த போது, இலங்கையைச் சேர்ந்த 29 வயது ஆண் பயணி ஒருவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அந்த இலங்கை பயணி, சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்துவிட்டு டிரான்சிட் பயணியாக, இன்று (ஞாயிறு) காலை 6.30 மணிக்கு, சென்னையில் இருந்து துபாய் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் பயணிக்க இருந்தார். அந்த இலங்கைப் பயணி, விமான நிலையத்திற்குள் டிரான்சிட் பயணிகள் தங்கி இருக்கும் அறையில் தங்கி இருந்தார். ஆனாலும், சுங்க அதிகாரிகள் அவரை ரகசியமாக கண்காணித்துக் கொண்டே இருந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை இலங்கை பயணி இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் துபாய் செல்வதற்காக பாதுகாப்பு சோதனை பகுதிக்கு வந்துள்ளார். அப்போது இலங்கை பயணி, தான் வைத்திருந்த ஒரு பார்சலை எடுத்து இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர் ஒருவரிடம் ரகசியமாகக் கொடுத்து, அவரிடம் ஏதோ கூறிக் கொண்டு இருந்துள்ளார். இதை கண்காணித்துக் கொண்டிருந்த சுங்க அதிகாரிகள், இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர் வைத்திருந்த பார்சலை வாங்கி பிரித்து பார்த்துள்ளனர். அப்போது, பார்சலுக்குள் தங்க கட்டிகள் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.
உடனடியாக, சுங்க அதிகாரிகள் இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியரையும், இலங்கைப் பயணியையும் கைது செய்துள்ளனர். மேலும், இலங்கை பயணியின் துபாய் பயணத்தையும் ரத்து செய்ததோடு, பார்சலில் இருந்த தங்கக் கட்டிகளையும் பறிமுதல் செய்து, சுங்க அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சுங்க அதிகாரிகளின் விசாரணையின் போது, அந்த பார்சலில் மொத்தம் 13.5 கிலோ தங்க கட்டிகள் இருந்துள்ளது. மேலும், இதன் சர்வதேச மதிப்பு ரூ.8.5 கோடி எனவும், இலங்கை பயணி சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இவர் சிங்கப்பூரில் இருந்து இந்த தங்க கட்டிகளை கடத்திக் கொண்டு வந்து விட்டு, சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியரிடம் தங்க கட்டிகளைக் கொடுத்துவிட்டு துபாய் செல்வதற்கு திட்டமிட்டு உள்ளார்.
பொதுவாக விமான நிலையங்களில் டிரான்சிட் பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்த மாட்டார்கள். அதை பயன்படுத்திக் கொண்டு, இந்த இலங்கை பயணி இதேபோல் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அதோடு இந்த கடத்தல் தங்கத்தை விமான நிலையத்தில் வெளிப்பகுதியில் இண்டிகோ ஊழியரிடம் இருந்து வாங்கி செல்வதற்காக வந்திருந்த கடத்தல் ஆசாமி யார் என்றும் சுங்கத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அடுத்த ஐந்து நாட்களுக்கு மழையும் உண்டு.. வெயிலும் உண்டு.. வானிலை ஆய்வு மையம் முக்கிய எச்சரிக்கை! - TN Weather report