திருநெல்வேலி: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (நவ.14) மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என உறுதி அளித்தார்.
அதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "மாஞ்சோலை பகுதிகளில் வசிக்கும் மக்களை சந்திக்க அனுமதி கேட்டால் அரசு அனுமதியை மறுக்கிறது. மாஞ்சோலை பகுதியை சுற்றுலாத்தலம் உள்ளிட்டவைகளாக மாற்றினால் கூட எங்களுக்கு இடம் வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கடைசி கோரிக்கை.
மேலும், மாஞ்சோலை பகுதியிலேயே வாழ்விடமும் வாழ்வாதாரமும் தேவை என்பதே மாஞ்சோலை பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கான தீர்வு மண்ணையும், மக்களையும் பேரன்பு கொண்டு காதலிக்கும் ஒருவனிடம் ஆட்சி அதிகாரம் வந்தால் மட்டுமே கிடைக்கும்.
மாஞ்சோலை பகுதியில் பல தலைமுறைகளாக வாழ்ந்த மக்களை கீழே வா என்றால் எப்படி வருவார்கள் மாஞ்சோலை பகுதி மக்களின் உரிமைக்காக டிசம்பர் முதல் தங்களது போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "கூட்டணி அழைப்பு எல்லாம் மற்ற கட்சிகளுக்கு தான் பாஜகவுக்கு கிடையாது" -இபிஎஸ் திட்டவட்டம்!
அதனை அடுத்து தொடர்ச்சியாக பேசிய அவர், "சர்வாதிகாரம் இல்லாமல் எந்த ஒரு செயலையும் சரி செய்ய முடியாது. ஆசிரியர் மாணவனின் பார்வையில் சர்வாதிகாரியாக தான் தெரிவார் ஆசிரியரின் பார்வையில் அது மாணவனின் நலனுக்காக இருக்கும். அதுபோலதான் காமராஜர், நேரு போன்ற மிகச் சிறந்த ஆட்சியாளர்கள் எல்லோரும் அன்பான சர்வாதிகாரிகளாகத்தான் இருந்துள்ளார்கள்.
மேலும், கட்சிக்கென விதிகளும் முறைகளும் உள்ளது. எந்த ஒரு இயக்கத்திலும் இயங்குவதற்கு ஒழுங்கு என ஒன்று உள்ளது. கட்சியின் கட்டுப்பாட்டிற்கு செவி சாய்க்கவில்லை என்றால் கட்சியிலிருந்து வெளியேறதான் வேண்டும். கட்சி விவகாரத்தை கட்சியிலிருந்து வெளியேறியதாக பேட்டி கொடுத்த அப்படிப்பட்ட நபர்களுக்கு உரிமை இல்லை. எங்கள் கட்சியில் நடக்கும் பிரச்சனைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்று கூறினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்