சென்னை: தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக இன்று (ஏப்.17) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு தலைமை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், “நாடாளுமன்றய்ஜ் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மின்னனு இயந்திரங்கள், நாளை வாக்குச்சாவடிக்கு சென்றுவிடும், தேர்தல் அதிகாரிகளும் நாளை மாலைக்குள் சென்றுவிடுவார்கள்.
தமிழ்நாட்டில் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், 45 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா மூலமாக கண்காணிப்பு பணிகள் நடைபெறும். முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிகளுக்காக ரேம்ப் மற்றும் சக்கர நாற்காலி ஆகியவை தயார் நிலையில் உள்ளது.
ஒவ்வொருவரும் தவறாமல், அவர்களுடைய உரிமையை விட்டுக் கொடுக்காமல் வாக்கு செலுத்த வேண்டும். 90 சதவீதம் பூத் சிலிப் கொடுத்தாகிவிட்டது. பூத் சிலிப் இல்லை என்றாலும், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அடையாள அட்டையை வைத்து வாக்களிக்கலாம். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு நன்றாகத்தான் உள்ளது, இருந்தாலும் பதட்டமான வாக்குச்சாவடிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்.
தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க 1950 என்ற எண் மூலமாக தொடர்பு கொண்டு புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பிரச்சார ஓய்வு காலத்தில் வேட்பாளர்களும், அவர்களுடைய ஆதராவாளர்களும் பிரச்சாரம் செய்யக்கூடாது, தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தொகுதிக்குள் செல்லக்கூடாது.
பணப்பட்டுவாடவைத் தடுக்க தேர்தல் அதிகாரிகள், காவல் அதிகாரிகளால் முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கள்ள ஓட்டுகளை தடுப்பதற்கும், ஒருவேளை அது தொடர்பான புகார் வரும் பட்சத்திலும், அது குறித்து தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்” என கூறியுள்ளார்.