சென்னை: இந்தியாவில் மத மோதலை உண்டாக்க வேண்டும் என்று திட்டமிட்டு தேர்தல் பரப்புரை செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI) கட்சி சென்னை வடக்கு மண்டல தலைவர் முகமது ரஷீத் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகார் மனுவில், "கடந்த 21ஆம் தேதி அன்று ராஜஸ்தான் மாநிலம் தேர்தல் பரப்புரையின் போது இந்திய ஒன்றியத்தின் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் செல்வங்கள் அனைத்தையும் முஸ்லிம்களுக்கு பங்கிட்டு கொடுத்துவிடும்.
மேலும் ஊடுருவல்கார்களுக்கும், குழந்தைகளை அதிகம் பெற்றுக் கொள்பவர்களுக்கும் உங்கள் சொத்துக்கள் பகிர்ந்து அளிக்கப்படுவதை அனுமதிக்கப் போகிறீர்களா என்று பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சார வீடியோ மற்றும் அந்தச் செய்தி நாடு முழுவதும் தொலைக்காட்சி செய்தித்தாள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
ராஜஸ்தான் தேர்தல் பரப்புரையில் பல தவறான தகவல்களை பரப்பி ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் மத பிரிவினையை ஏற்படுத்த வேண்டுமென்றே கெட்ட நோக்கத்தோடும், இந்தியாவில் நிலவும் அமைதி தன்மையை கெடுக்கும் விதமாகவும் பொது மக்களுக்கு மத்தியில் தேவையற்ற பதட்டத்தை விளைவிக்க முயற்சி செய்தும் தேர்தல் பரப்புரையை தவறாக பயன்படுத்தி இரு சமூகங்களுக்கும் இடையே மத மோதல் உண்டாக்க வேண்டும் என்ற கெட்ட உள்நோக்கத்திலும் காழ்ப்புணர்ச்சியில் பிரதமர் மோடி செயல்பட்டுள்ளார்.
எனவே பிரதமர் நரேந்திர மோடி மீது வழக்குப் பதிவு செய்து உடனடியாக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு பொது அமைதியை காக்கும்மாறும் காவல்துறை மூலமாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.