ஈரோடு: நேற்று (பிப்.05) பள்ளி சென்று திரும்பிய 6 வயது சிறுமியை, நகைக்காக கடத்திச் சென்ற மர்ம நபர்கள், கடத்திய சில மணி நேரத்திலேயே மீண்டும் வந்து விட்டுச் சென்றுள்ள சம்பவம், ஈரோடு மாவட்ட பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம் கிருஷ்ணம்பாளையம் சுப்பையன் வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கறிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள், அரசு உதவி பெறும் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற சிறுமி, பள்ளி முடிந்து மாலை அண்ணன் உடன் வீடு திரும்பிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், சிறுமியின் அண்ணனிடம் பேச்சு கொடுத்து சிறுமியைக் கடத்திச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் சிறுமி வீட்டுக்கு வராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பெற்றோர் கொடுத்த தகவலின் பேரில், கருங்கல்பாளையம் போலீசாரும் அவர்களுடன் இணைந்து சிறுமியைத் தேடியுள்ளனர்.
இந்நிலையில் சில மணி நேரத்திற்குப் பின் சிறுமியை கடத்திச் சென்ற மர்ம கும்பல், மீண்டும் சிறுமியை அவரது தந்தை பணிபுரியும் கறிக்கடையின் அருகே விட்டுச் சென்றுள்ளனர். இதையடுத்து விசாரிக்கையில், சிறுமி காதில் அணிந்திருந்த கவரிங் தோடை தங்கம் என நினைத்து, அதனை மட்டும் பறித்துக் கொண்டு மீண்டும் சிறுமியை விட்டுச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், சிறுமியைக் கடத்திச் சென்ற மர்ம கும்பல் யார் என்பது குறித்து, சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பள்ளி சென்ற சிறுமியை மர்ம நபர்கள் நகைக்காக கடத்திச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கூகுள் மேப் மூலம் செல்போன் திருடனை பிடித்த இளைஞர்! இணையத்தில் பகிர்ந்த ருசிகர தகவல்!