பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் மேட்டுப்பாளையம் காலனி தெருவைச் சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மகள் நிகிதா ஸ்ரீ (10). இவர் அதே பகுதியில் உள்ள மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுமியின் பெற்றோர் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று (திங்கட்கிழமை) காலை பள்ளிக்கு சென்று சிறுமி நிகிதா ஸ்ரீ, தனக்கு வயிறு வலிப்பதாகக் கூறி வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் இருவரும் கூலி வேலைக்குச் சென்றதால், சிறுமி தனியாக பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, வீட்டில் செல்போனை சார்ஜ் செய்த போது மின் கசிவு ஏற்பட்டதில் மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்ததாக தெரியவருகிறது. அதன் பின்னர் கூலி வேலைக்குச் சென்று பெற்றோர் மாலை வீடு திரும்பி வந்தபோது, சிறுமி நிகிதா ஸ்ரீ மின்சாரம் தாக்கி இறந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதன் பின்னர், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வி.களத்தூர் போலீசார் உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், செல்போன்களில் மின்சாரம் சார்ஜ் செய்யும் போது மின்கசிவால் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. மேலும், செல்போன்களை சார்ஜ் செய்யும் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்த விழிப்புணர்வு, பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!