சென்னை: தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்கள் கட்டாயம் தமிழ் கற்கும் சட்டம் 2006இன் படி, சிபிஎஸ்இ உள்ளிட்ட இதர கல்வி வாரியங்களின் கீழ், தமிழகத்தில் படிக்கும் மாணவர்கள் 2024-25ஆம் கல்வியாண்டில் தமிழ் பாடத்தில் கட்டாயம் தேர்வு எழுத வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கட்டாயம் தமிழ் கற்கும் சட்டத்தின் அடிப்படையில், பத்தாம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் படிக்கக்கூடிய மாணவர்கள் அனைவரும் தமிழை ஒரு பாடமாக படிக்க வேண்டும். பொதுத்தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி சிபிஎஸ்இ, ஐசிஎஸ்சி உள்ளிட்ட பிற கல்வி வாரியத்தின் கீழ் இயங்கக்கூடிய பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 2024-25ஆம் கல்வியாண்டில் தமிழ் பாடத்தில் கட்டாயம் தேர்வு எழுத வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறை கணக்கெடுப்பின்படி, சிபிஎஸ்இ பள்ளிகளில் மட்டும் தமிழ் மொழியைத் தாய் மொழியாகப் படிக்காத பிற மாணவர்கள் 6000 பேர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த மாணவர்களும் பிற கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழை ஒரு பாடமாக எழுத வேண்டும்.
அனைத்து சிபிஎஸ்இ உள்ளிட்ட இதர கல்வி வாரியங்களின் கீழ் இயங்கும் பள்ளிகள், இதற்குத் தேவையான நடவடிக்கைகளை இப்போதே எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரு நாள் போலீஸ் கஸ்டடிக்கு பிறகு பெலிக்ஸ் ஜெரால்டு மீண்டும் சிறையில் அடைப்பு; நாளை ஜாமீன் மனுத்தாக்கல்! - FELIX GERALD CASE