புதுடெல்லி: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வதற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2001 முதல் 2006ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராகப் பதவி வகித்த போது ஓ.பன்னீர் செல்வம் ரூ. 1.77 கோடி அளவிற்குச் சொத்துக்கள் குவித்தாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் மற்றும் சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. அதன்பின் மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்தவுடன் தமிழக அரசுத் தரப்பில் வழக்கு தொடர்வதற்கான அனுமதி திரும்பப்பெற்றது. இந் உத்தரவை ஏற்று ஓ.பன்னீர் செல்வத்தை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய், எஸ் வி என் பாட்டி. ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் டாக்டர் அபிஷேக் மனு சிங்வி, சித்தார்த் லுத்ரா, முகுல் ரோஹத்கி மற்றும் எஸ் நாகமுத்து ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
இதையும் படிங்க: ஃபெங்கல் புயல் உருவானது! இப்போ 10 கிலோ மீட்டர் வேகம்; கரையை கடக்கும்போது?
வழக்கு விசாரணையின்போது குறுக்கிட்ட நீதிபதி ஹிருஷிகேஷ் ராய், இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான வழக்கு வாபஸ் பெற்றப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டதில் உயர் நீதிமன்றம் தலையிட்டு உள்ளது. ஒரு நீதிபதி அமர்வு கொண்ட உயர் நீதிமன்றம் இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு வழக்காக விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்.
முகாந்திரம் இருப்பதற்கான ஆதாரங்கள் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும்படி சிறப்பு நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவை பின்பற்றி குற்றம் சாட்டப்பட்டவர் சிறப்பு நீதிமன்றத்தின் முன்பு ஆஜராகவேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கில் , குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களை உயர் நீதிமன்றம் பறித்திருப்பதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கூறியுள்ளது. இந்த வழக்கில் தமிழ்நாடு போலீஸ், ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்