புதுடெல்லி: சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உததரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் மறைந்த நிலையில் அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவில் இருந்து 40 எம்எல்ஏக்கள் திமுகவுக்கு வர தயாராக இருந்ததாக 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய சபாநாயகர் அப்பாவு கூறினார். இது அதிமுகவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது,"என்று கூறியிருந்தார்.
மேலும், அப்பாவுவின் பேச்சானது, இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 499 மற்றும் 500ன் கீழ் குற்றம் செய்ததாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு மனு தாக்கல் செய்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் அவர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்தது.
இதையும் படிங்க: "நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம்" - திருச்சி எஸ்.பி வருண்குமார்!
அப்பாவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், "இந்த வழக்கில், அதிமுகவின் 40 எம்.எல்.ஏ.க்கள் மீது அப்பாவு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு, உண்மையாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. தனிப்பட்ட முறையில் புகார்தாரர் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.அவர் இந்த வழக்கை தொடர்வதற்கு கட்சி எந்த அங்கீகாரத்தையும் அவருக்கு வழங்கவில்லை,"என்று கூறியது.
இதையடுத்து இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பாபு முருகவேல் மேல்முறையீடு செய்தார். அவரது மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் எஸ் வி என் பாட்டி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "அரசியல் அமைப்பில் இதுபோன்ற ஒரு நிகழ்வை எதிர்கொள்ள ஜனநாயகமும், சட்டமன்றமும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தை கொண்டுள்ளன. நீங்கள் இந்த விஷயத்தில் ஏதோ வினோதமாக நடந்தது போல் சொல்கிறீர்கள். இதுபோன்ற விஷயங்களைக் கையாள்வதற்குத் துல்லியமாக கட்சித் தாவல் தடைச் சட்டம் உள்ளது," என்று கூறினர். இதையடுத்து முருகவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.நாகமுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக கூறினார். இதற்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.