கோயம்புத்தூர்: சவுக்கு சங்கரின் மருத்துவச் சிகிச்சைக்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று (மே.09) கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பின் மீண்டும் கோவை மத்தியச் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
போலீஸ் அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் வைத்து கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் மீது சிறைத்துறை போலிசார் தாக்குதல் நடத்தியதாகவும் அவரை மருத்துவச் சிகிச்சைக்கு உட்படுத்த அனுமதி வேண்டும் எனவும் அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார். இதையடுத்து சவுக்கு சங்கரின் மருத்துவச் சிகிச்சைக்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, கோவை மத்தியச் சிறையில் இருந்த சவுக்கு சங்கரை போலிசார் பலத்த பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வலது கையில் கட்டுப் போடப்பட்டிருந்தது. சுமார் மூன்றரை மணி நேரமாக எக்ஸ்ரே, அல்ட்ரா ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து போலீசாரின் பாதுகாப்புடன் மீண்டும் கோவை மத்தியச் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலிஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, இன்று (மே.09) கோவை நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.