சென்னை: தமிழ்நாடு காவல்துறை பெண் உயர் அதிகாரிகள் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்துக்களைத் தெரிவித்ததாக, கடந்த 4ஆம் தேதி சவுக்கு சங்கரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து கோவைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், தேனியில் அவர் தங்கியிருந்த விடுதி மற்றும் அவரது காரை சோதனை செய்ததில் 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம் மற்றும் கார் ஓட்டுநர் ராம் பிரபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், மதுரை மாவட்ட போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் மனுத் தாக்கல் செய்திருந்தது.
இந்த நிலையில், 2 நாட்கள் விசாரணை செய்ய போலீசாருக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, நேற்றுடன் விசாரணை முடிவடைந்த நிலையில், தேனி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திலிருந்து போலீசார் பாதுகாப்புடன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்குப் பின்பு நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையே, யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதாவது, பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக கடந்த 4ம் தேதி யூடியூபர் சவுக்கு சங்கர், கோவை போலீசாரால் தேனியில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த 12ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். தற்போது இந்த உத்தரவை ரத்து செய்து, தனது மகனை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்து தனது மகனை ஒவ்வொரு ஊராக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வருவதாகவும், காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்த மகனுக்கு முறையான மருத்துவச் சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தனது மகன் செயல்படவில்லை என்றும், சட்டப்படியான நடைமுறைகளை பின்பற்றாமல் தனது மகனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதமானது என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: மஞ்சும்மல் பாய்ஸ் நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்!