மதுரை: பெண் காவலர்களை குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாக கருத்து தெரிவித்ததாகக் கூறி, மே 4ஆம் தேதி தேனி அருகே பழனிசெட்டிப்பட்டியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் 294(b), 353, 509 IPC, 4 - TNPHW ACT. 67 - IT ACT 353 IPC r/w பிரிவு 4 தமிழ்நாடு (பெண் துன்புறுத்தல் தடைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம்) 2000 பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் கைது செய்தனர்.
அப்போது அதே நாளில், பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீசார், சவுக்கு சங்கரின் காரில் இருந்து 500 கிராம் கஞ்சா எடுத்தது மற்றும் பெண் காவலரைத் திட்டி தள்ளிவிட்டு, அவரது பணியைச் செய்ய விடாமல் செய்ததாக ஐபிசி பிரிவுகள் 195/2024 U/S 294(b), 353 IPC & 4 of TNPHW ACT & 8(c) r/w 20(b)(ii)(A), 29(1), 25 of NDPS ACT-ன் கீழ் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து திருச்சி, சென்னையிலும் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சிஎம்டிஏவின் போலியான ஆவணங்களைத் தயாரித்து அவதூறு பரப்பியதாக கூறி பல வழக்குகள் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தன.
முன்னதாக கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் அவர் இரண்டு முறை குண்டர் தடுப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது தாயார் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: விவாகரத்தான பெண்களுக்கும் குறி; மேட்ரிமோனியில் பழகிய இளம்பெண்ணை ஏமாற்றி உல்லாச வாழ்க்கை..
தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யவும், ஜாமீன் கோரியும் சவுக்கு சங்கர் தரப்பு நீதிமன்றத்தை நாடியது. இதனை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து, ஜாமீன் வழங்கி கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி உத்தரவு வழங்கியது.
மதுரை மத்திய சிறையிலிருந்த வெளியில் வந்த சவுக்கு சங்கர் மீண்டும், மீண்டும் தொடர்ச்சியாக பல்வேறு அரசியல் சார்ந்த கருத்துக்களை யூடியூப் சேனல்களில் பேசி வந்தார்.
இந்நிலையில், நேற்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகாததால் மதுரை மாவட்ட சிறப்பு போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து நேற்று இரவு காவல்துறை பாதுகாப்புடன் தேனி அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மீண்டும் மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக ஆஜர் செய்யப்பட்டார்.