சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “ஒரு சவரன் தங்கம் ரூ.51 ஆயிரமாக உயர்ந்துவிட்ட சூழ்நிலையிலும், தேர்தல் காலகட்டத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்ல அனுமதி மறுப்பது தொடர்பாக புகார்கள் வந்தன. பல்வேறு நகைக்கடை உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் சங்கங்கள் சார்பிலும் அதுகுறித்த கோரிக்கைகள் தரப்பட்டன. அந்த புகாரை பரிசீலிக்கும்படி தேர்தல் கமிஷனின் கவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம்.
சின்னம் ஒதுக்குவதற்கு தனி விதிகள் உள்ளன. பதிவு பெற்ற அரசியல் கட்சி வேட்பாளருக்குச் சின்னம் ஒதுக்கும் போது, முந்தைய தேர்தலில் அந்த கட்சி வெற்றி பெற்றதா, அப்போது பயன்படுத்தப்பட்ட சின்னம் எது ஆகியவற்றை சரிபார்த்து முன்னுரிமை வழங்கப்படும்.
ஒரே சின்னத்தை பல வேட்பாளர்கள் கேட்டிருந்தால், பதிவு பெற்ற அரசியல் கட்சி வேட்பாளருக்கு குறிப்பிட்ட அந்த சின்னத்தை ஒதுக்க சம்மதமா என்று மற்ற சுயேட்சை வேட்பாளர்களிடம், சின்னம் ஒதுக்கும் அதிகாரி கேட்பார். அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டால், குலுக்கல் மூலம் சின்னம் ஒதுக்கப்படும்.
வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒட்டப்பட உள்ள வேட்பாளர் பட்டியல், தபால் ஓட்டுக்கள் ஆகியவற்றை அச்சிடும் பணி விரைவில் தொடங்கும். தேர்தல் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து துணை ராணுவம் தமிழ்நாடு வரத் தொடங்கும். 120 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 58 பேர் உள்ளனர். அவர்களின் வீடுகளுக்குச் சென்று தபால் ஓட்டுகள் பெறப்படுவது பற்றி தேர்தல் நடத்தும் அதிகாரி தான் முடிவெடுப்பார்.
வாக்குப்பதிவுக்கான எந்திரத்தில் 15 வேட்பாளர் பெயர்கள் மற்றும் ஒரு நோட்டா (யாருக்கும் ஓட்டு இல்லை) பட்டன் இடம்பெறும். 16 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடும் சூழ்நிலையில், கூடுதல் எந்திரங்கள் தேவைப்பட்டால், இணைக்கப்படும் ஒவ்வொரு கூடுதல் வாக்குப்பதிவு எந்திரத்திலும் தலா 16 வேட்பாளர்களின் பெயரை வைக்க முடியும். கூடுதல் எந்திரங்கள் வைக்கப்பட்டால், கட்சி எந்திரத்தின் கடைசி பட்டனாக நோட்டா இருக்கும்.
அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதில் உறுதியாக உள்ளோம். கடந்த மாதம் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கும் அடையாள அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரத்து 793 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 3 கோடியே 17 லட்சத்து 19 ஆயிரத்து 665 பேர் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 8 ஆயிரத்து 467 உள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி ஏற்படுத்தி தரக்கோரிய வழக்கு; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு! - Madras High Court