சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் எவ்வளவு சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது என்பது குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஒரு மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 40.05 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக தருமபுரியில் 44.08 சதவீதம் மற்றும் கள்ளக்குறிச்சியில் 44 சதவிதமும், அதே போல குறைந்தபட்சமாக மத்திய சென்னை பகுதியில் 32.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
விளவங்கோடு இடைத்தேர்தலில் 35.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வெயில் இருந்தாலும் வாக்குப்பதிவு அதிகமாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் வெயில் தாக்கத்தினால் சாமியானா பந்தல், சேர் உள்ளிட்டவை போடப்பட்டுள்ளது. வயதானவர்கள் வெயில் நேரத்தில் வாக்களிக்க வராமல் மாலை நேரத்தில் வரலாம். சின்னம் மாறி வாக்கு செல்வதாக தகவல் எதுவும் வரவில்லை.
வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் இல்லாத பட்சத்தில், ஒருவேளை அருகிலுள்ள வாக்குச்சாவடியில் உள்ளதா என்பதை இணையத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் 1,500 வாக்காளர்களுக்கு மேல் செல்லும் போது சில சமயங்களில் அருகிலுள்ள வாக்குச்சாவடிகளில் பெயர் இருக்கலாம் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பான எந்த ஒரு புகாரும் இதுவரை வரவில்லை என தெரிவித்தார். சென்னையில் ஒரு இடத்தில் வாக்கு பதிவு இயந்திரம் பழுதான போது அதிகாரிகள் உடனே சரி செய்தனர்.
சேலத்தில் இரண்டு வாக்குச்சாவடியில் வெயிலின் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், அங்குள்ள மாவட்ட தேர்தல் பார்வையாளரிடம் விவரம் கேட்டுகப்பட்டுள்ளது. அதில், இரண்டு நபர்களும் வயதானவர்கள். ஒருவர் வீல் சேரில் வந்துள்ளார். மற்றொருவருக்கு உடல்நிலையில் பிரச்சனை இருந்ததாக தெரியவந்துள்ளது. வெயில் காலம் என்பதால் அனைத்து வாக்கு மையத்திலும் நீர்மோர், பந்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் வாக்காளர்கள் தங்கள் உடல்நிலையை கருத்தில் கொள்ள வேண்டும். வாக்களிப்பதற்கு அதிகமான நேரம் உள்ளதால் பொறுமையாக தங்களுடைய வாக்கினை செலுத்தலாம் என தெரிவித்தார். மருத்துவத்துறையுடன் இணைந்து தேவைப்படும் போது மருத்துவ உதவிகளை செய்ய தயார் நிலையில் இருக்கின்றோம். வாக்காளர்கள் இணையத்திலேயே பார்த்து அருகிலுள்ள வாக்குச்சாவடியை தெரிந்துக்கொள்ளலாம். 6 மணிக்குள் வருபவர்களுக்கு ஆறு மணிக்கு மேல் டோக்கன் விநியோகிக்கப்பட்டு வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்படும்" என்றார்
இதையும் படிங்க: வாக்காளர்களுக்கு விஜயின் அன்பு வேண்டுகோள்.. வாக்களித்தபின் எக்ஸ் பதிவு! - Tamil Nadu Lok Sabha Election 2024