ஈரோடு: தாய் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல உயிர்வாழும் அனைத்துக்குமே முக்கியமானதுதான். அந்த தாயை இழந்த குட்டி யானை ஒன்றை அதன் கூட்டம் வாரி அணைத்துக் கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் பண்ணாரியில் நிகழ்ந்துள்ளது. வனத்துறை வசம் இருக்கும் யானைக் குட்டி ஒன்றை, தாய் அல்லாத மற்ற யானைகளுடன் சேர்ப்பது இதுவே முதல் நிகழ்வு என நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர் வனத்துறை அலுவலர்கள்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் நடக்க முடியாமல் கீழே விழுந்தது தாய் யானை ஒன்று. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை மருத்துவர் சதாசிவம், முதுமலை புலிகள் காப்பகத்தின் வனத்துறை மருத்துவர் ராஜேஷ், கோவை மண்டல வனத்துறை மருத்துவர் சுகுமார், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனத்துறை மருத்துவர் விஜயராகவன், மேகமலை புலிகள் காப்பகத்தின் வனத்துறை மருத்துவர் கலைவாணன் ஆகியோர் அடங்கிய குழு தாய் யானைக்கு சிகிச்சை அளித்தனர்,
ஆனால் உடல்நலம் குன்றிய யானைக்கு இரண்டு குட்டிகள் இருந்தன. 3 வயதான ஆண் யானை மற்றும் பிறந்து சிலமாதங்களே ஆன பெண் யானை என இரண்டும் திக்கற்று கூட்டத்துடனும் சேர முடியாமல் தாயுடனும் இருக்க முடியாமல் தவித்தன. சற்றே வளர்ந்த ஆண் யானையை விரட்டி கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சி வெற்றியடைந்தது. ஆனால் பெண் குடடி யானை தாயை விட்டு பிரிய மறுத்தது, வனத்துறையினர் ஒரு குழிபறித்து அதனுள் குட்டியை தனிமைப்படுத்தினர். தாய் குணமடைந்த உடன் அதனுடன் சேர்ப்பது தான் திட்டம். ஆனால் தாய் யானை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தது தான் சோகம்.
இதனையடுத்து தாயை இழந்து நின்ற அந்த பெண் குட்டியானையை வனத்துறையே முகாமில் வளர்ப்பதா? அல்லது கூட்டத்துடன் சேர்ப்பதா? அப்படி சேர்த்தால் தாய் இல்லாத கூட்டத்தில் யானையால் சேர முடியுமா? என ஏராளமான கேள்விகள். இருப்பினும் எந்த வாய்ப்பையும் பயன்படுத்திப்பார்ப்பது என முடிவு செய்த வனத்துறையினர், முன்னெப்போதும் செய்திராத பணியை செய்யத் துணிந்துள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் ராஜ்குமார் கூறுகையில், " உயிரிழந்த பெண் யானைக்கு எங்கள் வசம் இருந்த 2 மாத குட்டி மட்டுமல்லாது, 3 வயதில் மற்றொரு குட்டியும் இருந்தது. அந்த சகோதரன் இருக்கும் கூட்டத்துடன் குட்டியை சேர்ப்பது தான் எங்களின் நோக்கமாக இருந்தது" என்றார். வனத்துறை யானைக் கூட்டத்தினருகே குட்டியை கொண்டு சென்ற போது, அதே கூட்டத்தைச் சேர்ந்த பெண் யானை ஒன்று குட்டியை வாரி அணைத்து அழைத்துச் சென்றது.
புதிதாக சேர்ந்த கூட்டத்துடன் குட்டி யானை நலமாக இருக்கிறதா? என்பதை தொடர்ந்து டிரோன் மூலம் கண்காணித்து வந்ததாகக் கூறும் ராஜ்குமார், குட்டி யானைகள் பொதுவாக தாயைத் தவிர வேறு யானைகளோடு ஒன்று சேர்வது மிகவும் அரிதானது என குறிப்பிடுகிறார். ஆனால் குட்டி யானை அந்த குழுவுடன் சேர்ந்திருப்பது தெரிய வந்துள்ளதால், வளர்ப்பு முகாமிற்கோ அல்லது வன உயிரியல் பூங்காவிற்கோ கொண்டு செல்வது தவிர்க்கப்பட்டுள்ளது. இது போன்று தாய் யானையை இழந்த குட்டி யானை, மற்ற பெண் யானையுடன் சேர்க்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை எனவும் மகிழ்ச்சி பொங்க தெரிவிக்கிறார்.
இந்நிலையில், தாய் யானையை இழந்த குட்டி யானை, மற்ற யானை கூட்டத்துடன் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் வீடியோவை வனத்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே யானையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவ குழுவைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் சுகுமாரன் கூறுகையில், உடல் நலக்குறைவால் இறந்த பெண் யானைக்கு வயது 45 முதல் 48 வரை இருக்க வாய்ப்புள்ளது. யானையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்து பார்த்தபோது கல்லீரல் வீக்கம், இதய பகுதி வீக்கம், மண்ணீரலில் ரத்தக்காயம் மற்றும் சிறுநீரகம் பாதித்திருந்ததும் தெரியவந்தது. மேலும் யானையின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.
குட்டி யானை கூட்டத்துடன் சேர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள, வனத்துறை கூடுதல் முதன்மைச் செயலாளரான சுப்ரியா சாகு, இதற்கு முன்னர் குட்டிகளை தாயுடன் சேர்க்கும் நடவடிக்கைகள் பலவற்றை எடுத்திருந்தாலும் இது சவாலான பணியாக இருந்தது என்கிறார். இந்த நிலப்பரப்பில் வசிக்கும் யானைகள் அனைத்தும் ஒரே சமூகப் பண்பை கொண்டிருப்பதையே இது காட்டுவதாகவும் தமது ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மூணாறில் லாரியை வழிமறித்த படையப்பா யானை.. பொதுமக்கள் பீதி!