சென்னை: சென்னை போயஸ் கார்டனில் சசிகலா தனது ஆதரவாளர்களைச் சந்தித்தார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது எப்படி உள்ளது என்பதை நீங்கள் காண்பீர்கள். சுற்றுப் பயணத்திற்கான ஏற்பாடுகள் 90 சதவீதம் நிறைவடைந்து இருக்கிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, பெண் முதலமைச்சர் என்பதால் பல விமர்சனங்களை முன் வைத்தார்கள். ஆனால், இன்றைக்கு அவர் புகைப்படம் அனைவருக்கும் தேவைப்படுகிறது. அதனால் அதனை பயன்படுத்துகிறார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும்போது காவல்துறையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் கள்ளக்குறிச்சி போன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொண்டார். தற்பொழுது இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் காவல்துறையை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைக்கவில்லை என்பதால் கள்ளக்குறிச்சி போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. காவல்துறையை இயக்குபவர்கள் சரியில்லை.
ரேஷன் கடைகளில் முறையாக பொருட்கள் வழங்கப்படவில்லை. ரேஷன் பொருட்கள் டெண்டர் விடப்பட்டு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனால் தான் பொருட்கள் வழங்கப்படாமல் இருக்கிறது. இந்த ஆட்சி நிர்வாகம் சரியானதாக இல்லை. மக்கள் பிரச்னையை சட்டப்பேரவையில் பேச வேண்டிய சரியான நபர்கள் இல்லை. அதனால் தான் ஆளுங்கட்சி அவர்கள் விருப்பப்படி செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக சட்டப்பேரவையை புறக்கணிப்பது தவறு. மக்கள் வாக்களித்து வரும் போது தவறாக செயல்படும் திமுக அரசை தட்டிக்கேட்க உள்ளே இருப்பது தான் நியாயம். அமைச்சர் துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்கள் அவையில் பேசுவது மிகவும் தவறாக உள்ளது. அவ்வாறு பேசக்கூடாது. போதைப் பொருட்களின் புழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. மாநில அரசு, மத்திய அரசு உடன் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது.
இதனால் மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு பணம் தரமால் இருக்கிறது. பணம் இருந்தால் தானே மெட்ரோ பணி செய்ய முடியும்? தேர்தலுக்கு தேர்தல் திமுக பொய்யைக் கூறுகிறார்கள். வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நல்ல முடிவு வரும். அம்மாவின் ஆட்சி அமையும். 22 ஆயிரம் பேருந்து அதிமுக ஆட்சிக் காலத்தில் வாங்கியது.
அதன் பிறகு எந்த புதிய பேருந்தும் வாங்கவில்லை. தமிழகத்தை பொறுத்தவரைக்கும் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை. படிப்படியாகத்தான் மதுவிலக்கை அமல்படுத்த முடியும். திமுக நிர்வாகத்தில் தவறு உள்ளது. சரியாக நிர்வாகம் நடைபெற்றிருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.
நீட் தேர்வு நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் பொழுது அதற்கு ஆதரவாக நின்றது திமுக தான். ஆனால், தற்பொழுது திமுக பகல் வேஷம் போடுகிறது. வாக்களிக்கும் மக்களை பிச்சைக்காரர்கள் போன்று கருதுகிறார்கள். அதனால் தான் ஆர்.எஸ்.பாரதி போன்றவர்கள் இம்மாதிரி பேசுகிறார்கள். இதற்கெல்லாம் ஒரு முடிவு உண்டு, நிச்சயமாக ஒரு முடிவு கட்டப்படும்.
கோடநாடு கொலை வழக்கில் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இந்த வழக்கை முதலமைச்சர் முடிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு கிடையாது. ஏனெனில், ஆட்சி பொறுப்பேற்ற மூன்றே மாதத்தில் கோடநாடு வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார். ஆனால், தற்பொழுது இன்டர்போல் (interpol) உதவியை நாடுவதாக கூறுகிறார். அதனால் இந்த வழக்கை அவர்கள் முடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு கிடையாது" என்றார்.
இதையும் படிங்க : திருவண்ணாமலை குளங்கள் ஆக்கிரமிப்பு; தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு! - Tiruvannamalai ponds encroachment