கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் புலனாய்வு பிரிவு தலைமைக் காவலர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சரவணம்பட்டி காவல் நிலையத்தில் குற்றம் மற்றும் புலனாய்வு பிரிவு தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் பாலகுமார் (38). இவரது மனைவி சுமதி, தாஜ் குழும ஹோட்டல்களில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், சுமதிக்கு பதவி உயர்வு கிடைத்ததை அடுத்து, கடந்த 15 நாட்களுக்கு முன்பாக லண்டனில் உள்ள தாஜ் ஹோட்டலுக்குச் சென்றுள்ளார்.
இவர், வெளிநாட்டிற்குச் சென்றுள்ளதால் தனது இரண்டு குழந்தைகளையும் சேலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில், பாலகுமார் தனது மனைவியுடன் தொலைப்பேசியில் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் பாலகுமார் ஈடுபட்டு, ஏப்ரல் 20ஆம் தேதி காலை வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
மேலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் வேலைக்கு வராததாகத் தெரிகிறது. அவரது பெற்றோர்களாலும் அவரை அணுக முடியாமல் போயிருக்கிறது. இதனால், சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர்கள் சரவணம்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில், போலீசார் பாலகுமார் வீட்டிற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கதவு உள்பக்கமாகத் தாளிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, கதவை உடைத்த போலீசார் உள்ளே சென்று பார்த்த நிலையில், பாலகுமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர், பாலகுமாரின் உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? உயிரிழந்த பாலகுமார், குடும்ப பிரச்சனை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து, பாலகுமார் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது உறவினர்களுக்கும், அவரது மனைவிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல: சொந்த காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் கீழ்க்கண்ட சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்ணுக்கு அழையுங்கள்..
- சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் - 044-24640050
- மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் - 104
இதையும் படிங்க: ஊரோடும் மதுரையில் தேரோட்ட திருவிழா! பக்தர்கள் வடம் பிடிக்க கோலாகலமாக துவங்கியது.. - Madurai Chithirai Festival