சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. பருவமழையின் எதிரொலியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கி விட்டது. மேலும், நேற்று(அக் 15) முழுவதும் சென்னையில் கனமழை பெய்தது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி, சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன. அதுமட்டுமின்றி சில சாலைகளும் மூடப்பட்டன.
இந்நிலையில், நேற்று முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக அனைத்துப் பகுதிகளிலும் மழைநீர் தேங்கி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ஆனால், பல இடங்களில் நேற்றிரவே மழைநீர் முழுவதுமாக கால்வாய் வழியாக வடிந்து விட்டது.
சில இடங்களில் மட்டும் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் தூய்மை பணியாளர்களும், மாநகராட்சி பணியாளர்களும் ஈடுபட்டனர். குறிப்பாக, மேற்கு மாம்பலம் மற்றும் தியாகராய நகரில் பல்வேறு தூய்மை பணியாளர்கள் ஒவ்வொரு தெருவிலும் இருக்கும் வடிகாலின் அடைப்புகளை சரிசெய்தனர்.
இதுகுறித்து தூய்மைப் பணியாளர் மணிவண்ணன் கூறுகையில், "நேற்று இந்த பகுதியில் அதிகமான மழைநீர் தேங்கி இருந்தது. நாங்களே முடிந்த அளவிற்கு அனைத்து மழைநீரையும் வெளியேற்ற முயற்சி செய்தோம். ஆங்காங்கே சில அடைப்புகள் ஏற்பட்டிருந்தன. அடைப்பில் இருக்கும் மணலை அள்ளிப் போட்டு அடைப்பை சரி செய்தோம். ஆனால், மீண்டும் மணல் சேர்ந்து அடைப்பாகி விட்டதால், தற்போது அதனை சரி செய்து வருகிறோம்.
நேற்று இருந்த மழைநீரைக் காட்டிலும் இன்று அனைத்தும் வடிந்து விட்டது. மாநகராட்சி பணியாளர்கள் அனைவரும் இணைந்து மோட்டார் பம்பை வைத்து மழைநீரை உறிஞ்சி எடுத்தனர். சாலையில் இருக்கக்கூடிய மணல் தான் மழை பெய்வதன் காரணமாக மழைநீர் வடிக்காலில் சேர்ந்து அடைப்பை ஏற்படுத்துகின்றது.
இதனால் தான் மழைநீர் தேங்குகின்றது. நான் எனது கையை வைத்து அந்த அடைப்புகளை சரி செய்தேன். அடைப்புகள் ஏற்பட்டிருக்கும் இடத்தில் எங்கள் கையை உள்ளே விட்டு தான் அடைப்புகளை சரி செய்கிறோம். நாங்கள் அப்படி செய்யாமல் இருப்பதற்கு மாநகராட்சி ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க : மக்களிடையே பக்தி குறைந்ததே பருவம் தவறிய மழைக்கு காரணம்: மதுரை ஆதீனம் கருத்து
பின்னர் தூய்மை பணியாளர் மாலா கூறுகையில், "நான் இந்த பகுதியில் ஒன்றரை வருடங்களாக வேலை செய்கிறேன். நேற்று அதிகமாக மழைநீர் தேங்கியது. மழைநீர் வடிகால்வாயில் தேங்கியிருந்த குப்பைகள் அனைத்தையும் எடுத்து விட்டோம். இரவு மழைநீர் இருந்தது. ஆனால், காலையில் அனைத்தும் வடிந்து விட்டது.
நேற்று முழங்கால் அளவிற்கு மழைநீர் இருந்தது. எனவே, நாங்கள் அடைப்புகளை எடுத்துவிட்டு சென்றோம். மேலும், மோட்டார் பம்பை வைத்து மழைநீரை மாநகராட்சி பணியாளர்கள் வெளியேற்றினார்கள். காலையில் மீண்டும் அடைப்புகளை எடுத்துள்ளோம்" என்றார்.
மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஏகாம்பரம் கூறுகையில், "நேற்று அதிகமான மழை பெய்தது. இதனால் தேங்கிய மழைநீர் அனைத்தும் காலையில் வடிந்து விட்டது. மாநகராட்சி பணியாளர்கள் அனைத்து வேலைகளும் செய்தனர். தற்போது இந்த ஏரியாவில் மழைநீர் தேங்கவில்லை.
கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம் போன்ற பகுதியில் மழைநீர் தேங்க வில்லை. மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக தேவையான பொருட்களை வாங்கி வைத்திருக்கின்றனர். திடீரென மழை பெய்தால் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பார்கள். எனவே, தேவையான பொருட்களை வாங்கி வைப்பது சரி தான்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்