திருநெல்வேலி: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், பல்வேறு மாணவர்கள் 490க்கும் மேல் மதிப்பெண்கள் சாதனை படைத்துள்ளனர். அந்த வகையில், தமிழகம் முழுவதும் மூன்று மாணவிகள் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்.
அதில், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே வடக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த லிங்கதுரை - செல்வபாப்பா தம்பதியின் மகள் சஞ்சனா அனுஷ் என்ற மாணவி 499 மதிப்பெண் எடுத்துள்ளார். இவர் வடக்கன்குளம் எஸ்ஏவி தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்றார்.
இந்த பொதுத்தேர்வில் தமிழை தவிர்த்து, மீதமுள்ள பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், மாணவி சஞ்சனா அனுஷை பள்ளி நிர்வாகிகள் நேரில் அழைத்து பாராட்டினர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களும் பாராட்டினர்.
இது குறித்து மாணவி சஞ்சனா அனுஷை ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் சார்பில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, "மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விடாமுயற்சியுடன் படித்தேன். அதனால் வெற்றி கிடைத்துள்ளது. எனக்கு ஆசிரியர்கள் பெற்றோர்கள் உறுதுணையாக இருந்தனர்.
தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுவதே எனது லட்சியம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: “அறிவியல் எக்ஸாம்-க்கு முந்தைய நாள் அப்பா இறந்துட்டாங்க..” தாயார் வைத்த முக்கிய வேண்டுகோள்! - 10th Result In Tamil Nadu