சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் அறிவுறுத்திதன் பேரில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை என கூறி தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே உற்பத்தி பாதிப்பு, தொழிலாளர்கள் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் சாம்சங் தொழிற்சாலை, வேறு மாநிலத்திற்கு மாற்றப்படலாம் என தகவல்கள் பரவி வரும் நிலையில், அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் தங்கத் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "தொழிலாளர்கள் நலனை பாதுகாக்க வேண்டும். மேலும் படித்த இளைஞர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற அக்கறையுடன் அரசு இந்த விவகாரத்தை அணுகி வருகிறது.
இதையும் படிங்க:சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவலா? - காஞ்சிபுரம் போலீஸ் பரபரப்பு விளக்கம்!
சாம்சங் நிறுவனத்துடன் நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையின் முடிவாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், மாத ஊதியத்துடன் சிறப்பு ஊக்கத் தொகை 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பணிக்காலத்தில் ஊழியர்கள் இறக்க நேரிட்டால் உடனடி நிவாரணமாக ரூபாய் 1லட்சம் வழங்கப்படும்.
அனைத்து தொழிலாளர்களுக்கும் ஏசி பேருந்து வழங்கப்படும். உணவு,கழிப்பிடம்,மருத்துவம் மேம்படுத்தப்படும் உள்ளிட்ட கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் ஏற்றுக்கொண்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இருப்பினும் சிஐடியு சங்க பதிவுக்காக போராடி வருகின்றனர்.
சங்க பதிவு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அதன் முடிவு கிடைத்தவுடன் தொழிலாளர் நலன் துறை இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும். நீதிமன்றம் தீர்ப்பை தொழிலாளர் நலத்துறை எடுக்கும் என சிஐடியுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்த குடும்பத்தினர் நலன் கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சிஐடியு சங்கத்தினர் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என அரசு சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
தொழிலாளர்களை வீடு புகுந்து யாரும் கைது செய்யப்படவில்லை. எந்த அடக்குமுறையும் செய்யவும் இல்லை, செய்யப் போவதுமில்லை. சாம்சங் நிறுவனம் வேறு மாநிலத்திற்க்கு செல்ல வில்லை. தமிழ்நாடு தொழில்நிறுவனங்களுக்கு உகந்த மாநிலமாக உள்ளது" என்றார்.
மேலும் "சிஐடியூ நடத்தும் போராட்டத்தை நாங்கள் அரசியலாக பார்க்கவில்லை. தொழிற்சங்கங்கத்தை பதிவு செய்வதற்கு எதிரான மனநிலையில், அரசுக்கு இல்லை. பல தொழிற்சாலைகளில் சங்கங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சாம்சங் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நலனை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட வேண்டும்" என வலியுறுத்தினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்