சேலம்: சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த நடுவனேரியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி செல்வம் - சிவரஞ்சனி தம்பதியின் மகள் ராவணி. இவர் அரசு மாதிரிப்பள்ளியில் கல்வி பயின்று வந்தார். நடைபெற்று முடிந்த 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 586 மதிப்பெண்கள் பெற்ற இவர் இயற்பியல், கணித பாடத்தில் தலா 100 மதிப்பெண்ணும், வேதியியல் பாடத்தில் 99 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், பொறியியல் படிப்பிற்கு மாணவி ராவணி விண்ணப்பித்துள்ளார். இதன்படி, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியில் அரசுப் பள்ளிகளுக்கான 7.5 இடஒதுக்கீட்டுப் பிரிவில் மாணவி ராவணி 199.50 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அவருக்கு அரசு மாதிரிப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெகதீசன், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர். மாநில அளவில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய மாணவி ராவணி, அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயில உள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், முதலிடம் பிடித்த மாணவியை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேரில் அழைத்து அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்று கூறி அவருக்கு அப்துல் கலாம் புத்தகத்தையும் ஆட்சியர் வழங்கினார்.
இதையும் படிங்க: பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கட்-ஆப் மதிப்பெண் அதிகரிக்குமா?