சேலம்:சேலம் மாமாங்கம் பகுதியில் சேலம் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது .இந்த தேசிய நெடுஞ்சாலையில் சில பகுதி குறுகலாக உள்ளது. குறிப்பாக மாமாங்கத்திலிருந்து ஐடி பார்க் செல்லும் பாதை மிகவும் குறுகலாக இருப்பதால் அவ்வழியாகச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வழியாகத்தான் கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனைக் கண்காணித்த தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் மாமாங்கத்திலிருந்து ஐடி பார்க் வரை சாலையை அகலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசின் செயில் ரீ பேக்டரி நிறுவனம், கையகப்படுத்தி வைத்துள்ள நிலத்தின் குறுக்கே ஆக்கிரமித்து, சுற்று சுவர் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆக்கிரமிப்பு? மாமாங்கம் பகுதியில் அமைந்துள்ள சாலை சற்று சறுகலான சாலையாகும். இதனால் மழைக் காலங்களில் டால்மியா போர்டு பகுதியில் இருந்து வழிந்தோடும் தண்ணீர், 140 அடி அகலம் கொண்ட கீழ் போர்டு ஓடையிலிருந்து இவ்வழியாக நெடுஞ்சாலையை சாலையை கடந்து பெரிய மேட்டூர், ஜாகிர் ரெட்டிப்பட்டி வழியாக சூரமங்கலம் பகுதியில் உள்ள ஏரியைச் சென்றடைகிறது.
இதனால் அப்பகுதியில் விவசாய மற்றும் குடிநீர் தேவைக்கு ஓடை நீர் இயற்கையாக சென்றடைவதால் 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைந்து வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு செயில் ரீ பேக்டரி நிறுவனம் சுற்றுச்சுவர் அமைத்து 140 அடி அகலம் கொண்ட நீர் ஓடையை ஆக்கிரமித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அவ்வழியாக வழிந்து ஓடும் மழைநீர் செல்வதற்கு வழியில்லாமல் சாலையை அடைகிறது. தற்போது நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் சாலையின் குறுக்கே ஓடை நீர் செல்வதற்காக பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு: இந்தநிலையில் ஓடையில் தண்ணீர் செல்ல ஏதுவாக ஆக்கிரமிப்பு சுற்றுச்சுவரை அப்புறப்படுத்துமாறு அப்பகுதி மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மேலும் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றினால் தான் சாலை விரிவாக்கமும், ஓடைக்கான பாலமும் அமைக்க முடியும், இதனை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்பை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக மாமாங்கம் பகுதியைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் கூறுகையில்,"காலம் காலமாக கீழ் போர்டு பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள நீரோடை தண்ணீர் தான், பத்துக்கு மேற்பட்ட கிராம மக்களுக்கு விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ளது.
இதனை பல ஆண்டுகளாக செயில் நிறுவனம் சுற்றுச்சுவர் கட்டி தடுத்து விட்டதால் தண்ணீர் ஆதாரம் இல்லாமல் போய்விட்டது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் அந்த சுவரை அகற்றி எங்களின் தண்ணீர் ஆதாரத்திற்கு வழி ஏற்படுத்தித் தர வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூவம் ஆற்றில் கலக்கப்படும் மலக்கழிவுகள் - வீடியோ ஆதாரம் வெளியீடு!