சேலம்: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் சேலத்தில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக சேலம் சிவதாபுரம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பியது. அதிலிருந்து வெள்ளமாக வெளியேறிய நீர் ஏரியின் அருகே உள்ள சுமார் ஆயிரம் வீடுகளுக்குள் புகுந்தது. மேலும் சேலம் - இளம்பிள்ளை செல்லும் சாலையில் ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியது .
30 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதில் அவ்வழியாக சென்ற சரக்கு ஆட்டோ ஒன்று நீரில் சிக்கி மூழ்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக ஒட்டுநர் உயிர் தப்பினார். இந்த சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி நின்றதால் சேலத்தில் இருந்து இளம்பிள்ளை, தாரமங்கலம், வேம்படிதாளம், சித்தர் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஏரியிலிருந்து சாலையில் வழிந்து ஓடும் தண்ணீர் காரணமாக இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களும் தண்ணீரில் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்லூரி செல்ல முடியாமல் வீடு திரும்பினர்.
இதையும் படிங்க: மழை காலம் தொடங்கிடுச்சி..தக்காளி விலையும் குறைஞ்சிடுச்சு..இன்னைக்கே வாங்கிடுங்க!
ஆண்டுதோறும் பருவமழையின் போது சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி, வழிந்து ஓடும் மழைநீர் சிவதாபுரம் பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து மாவட்ட நிர்வாகம் மழை வெள்ள பாதிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்தநிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள், நேரில் சென்று பார்வையிட்டார்.
தீர்வு கிடைக்குமா? சேலத்தாம்பட்டி ஏரி சுமார் 100 ஏக்கர் பரப்பு கொண்டது. முழுவதும் நிரம்பியுள்ள இந்த ஏரியில் இருந்து நீர் வழிந்தோடும் நிலையில், அதன் ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் காரணமாக, ஏரி நீர் கடந்த ஆண்டும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. தற்போதும் இதே அவலம் நீடிக்கிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்