சேலம்: சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே அணைமேட்டில் உள்ள ராஜ முருகன் கோயிலில் 56 அடி உயரத்தில் முருகன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான கும்பாபிஷேகம் வருகின்ற 19ஆம் தேதி நடக்கவிருந்த நிலையில், முருகன் சிலையின் தோற்றம் குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து சிலையைச் சீரமைத்த பின்பே கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், சேலம் தாரமங்கலம் காவல் நிலையத்தில் பக்தர்கள் சார்பில் மனுவும் அளிக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாகக் காவல் துறையினர் கோயில் நிர்வாகிகளிடம் ஆலோசித்தனர்.
இதையடுத்து, சிலையை மறு சீரமைப்பு செய்வதற்கான நடவடிக்கையைக் கோயில் நிர்வாகம் மேற்கொண்டது. இந்த நிலையில், கோயில் முன்பு அமைந்துள்ள 56 அடி உயரம் கொண்ட முருகன் சிலை சீரமைப்பதற்காகச் சிலை முழுவதும் துணியால் மறைக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்த பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்பே கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த உள்ளதாகக் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த முருகன் சிலையை வடிவமைத்தவர், இதுவரையில் அதிகபட்சமாக 10 அடி உயரத்திற்கு மட்டுமே சிலைகள் வடிவமைத்ததாகவும், இது போன்ற உயரமான சிலையை வடிவமைப்பது இதுவே முதல் முறை என்பதால் இந்த குளறுபடிகள் நடந்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 'இனி யார் மனதையும் புண்படுத்தமாட்டேன்' - நீதிபதியிடம் உறுதியளித்த சவுக்கு சங்கர்? - Savukku Shankar