சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய துணை வேந்தருக்கு உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திக் கடிதம் எழுதியுள்ளார். அவர் அனுப்பி உள்ள கடிதத்தில், “சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தின் அலுவலர்கள் மீது பல்கலைக்கழகத்தின் பணியாளர் நியமனம், பொருட்கள் கொள்முதல் ஆகியவற்றில் முறைகேடுகள் நடைபெற்றதாக பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த உயர் கல்வித் துறையின் அரசு கூடுதல் செயலாளராக பணியாற்றிய சு.பழனிசாமி மற்றும் உயர் கல்வித்துறையின் இணைச் செயலாளர் ம.இளங்கோ ஹென்றி தாஸ் (தற்போது அரசு கூடுதல் செயலாளர்) ஆகியோர் அடங்கிய குழுவினை அமைத்தது.
அந்த குழு தனது விசாரணையை மேற்கொண்டு, அறிக்கையினை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. விசாரணை அறிக்கையில் பேராசிரியர், கணினி அறிவியல் துறைத் தலைவர் மற்றும் பதிவாளர் கு.தங்கவேல் மீது அளிக்கப்பட்டிருந்த புகார்களை விசாரணை செய்து, தனது முடிவினை சமர்ப்பித்துள்ளது. கணினி அறிவியல் துறைத் தலைவர் கு.தங்கவேல், பணி நியமனம் உள்ளாட்சி தணிக்கைத் துறையின் தடையில் இடம் பெற்றது.
அதனை நீக்கியது சட்டப்படி தவறானது. தங்கவேல் பதிவாளர் பொறுப்பில் இருக்கும்போது, தன்னுடைய துறைக்குத் தேவையான அனைத்து அறைகலன்களும் ஒரே நிறுவனத்தில் கொள்முதல் செய்தது மற்றும் அவ்வாறு வாங்கிய அறைகலன்களுக்கு ஒரே ரசீதுக்கு இரண்டு முறை பணம் பெற்றது குறித்து 2019 -2020ஆம் நிதியாண்டில் உள்ளாட்சி நிதித் தணிக்கையில் தடை எழுப்பப்பட்டது.
கணினி அறிவியல் துறைத் தலைவரும் மற்றும் பல்கலைக்கழக கணினி மைய இயக்குநரான தங்கவேல், கணிப்பொறி கொள்முதல் செய்துள்ளதில் பெரும் ஊழல் மற்றும் உயர் கட்டமைப்பு (அதிக திறன்) கொண்ட கணிப்பொறிகளின் விவரங்களைக் குறிப்பிட்டு விலைப்புள்ளிகள் கோரப்பட்டு குறைந்த திறனுள்ள கணிப்பொறிகளையே கொள்முதல் செய்துள்ளதில் பெரும் ஊழல் செய்ததால், கடந்த ஆண்டுகளில் பல மென்பொருட்களை, கணினிகளை முறைகேடாக தமிழ்நாடு அரசின் விதிகளை மீறி கொள்முதல் செய்ததில் நிதி இழப்பு மற்றும் ஊழல் செய்துள்ளார்.
கணினி அறிவியல் துறைக்கு ஒதுக்கிய நிதியை விதிகளை மீறி தவறாக பயன்படுத்தியது மற்றும் தேவைக்கு அதிகமாக கணினிகள் கொள்முதல் செய்ததில் நிதி முறைகேடுகள் M/s MAG Edu Solutions (India) Private Limited நிறுவனத்திடம் சாப்ட்வேர் வாங்கப்பட்டு, இன்று வரை செயல்படாமல் உள்ளது. DDU-GKY திட்ட உதவியுடன் ஆதிதிராவிட இளைஞர்களுக்கு நடத்தப்படும் ஸ்கில் கோர்ஸ்களில் பெறும் கொள்முதல்கள், விதிமீறல்கள் முறைகேடானது.
பல்கலைக்கழகப் பணிகள் அவுட்சோர்சிங் முறையில் சில குறிப்பிட்ட நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதும் நிரூபணமானது. விசாரணைக் குழுவால் அளிக்கப்பட்டுள்ள விசாரணை அறிக்கையில் பேராசிரியர், கணினி அறிவியல் துறைத் தலைவர் மற்றும் பதிவாளர் தங்கவேல் மீதான நிரூபணமான குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையானது என அரசு கருதுகிறது.
எனவே கணினி அறிவியல் துறைத் தலைவர் மற்றும் பதிவாளர் தங்கவேல் வயது முதிர்வு காரணமாக வரும் 29ஆம் தேதி அன்று பணி ஓய்வு பெறவுள்ளதாலும், விசாரணைக் குழு அளித்துள்ள நிரூபணமான குற்றச்சாட்டுகள் மீது மேல்நடவடிக்கை எடுக்க வேண்டியிருப்பதாலும், பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதிக்காமல் பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் அனுப்பிய கடிதத்தின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளாமல், பல்கலைக்கழக துணைவேந்தர் காலதாமதம் செய்வதாகவும், இந்த கடிதம் பெறப்பட்டு 24 மணி நேரம் ஆன நிலையில், அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக பதிவாளர் அலுவலகத்திலேயே அமர்ந்து சில கோப்புகளை சரி செய்யும் பணியில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளராக தங்கவேல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர் தங்கவேல், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறை தொடங்கப்பட்ட 2005ஆம் ஆண்டு முதல், கணினி அறிவியல் துறைத் தலைவராக இருந்து வந்தார் என்று என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சட்ட விதிகளை மீறி, வர்த்தக ரீதியான நிறுவனத்தை தொடங்கியதாக கைது செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த புகாரில் தொடர்புடைய பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் இன்று வரை தலைமறைவாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “சென்னை பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளியே”- கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா விளக்கம்!