சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரிவோர் அனுமதி பெறாமல் புத்தகம் வெளிடவோ, சமூக ஊடகங்களில் பேட்டி கொடுக்கவோ கூடாது என பதிவாளர் தங்கவேலு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலு நடத்தை விதிகள் தொடர்பாக நேற்று (பிப்.6) சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பின்பற்றவேண்டிய நடத்தை விதிகளின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறாமல் புத்தகங்கள் வெளியிடவோ, சமூக ஊடகங்களில் பேட்டி கொடுக்கவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை அனுமதி பெற்று அல்லது அனுமதி பெறாமல் வெளியிட்டுள்ள புத்தகங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் உள்தர உத்தரவாத மையத்தின் தேவைக்காக வரும் 20ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறும்' அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலு வெளியிட்டுள்ள இந்த சுற்றறிக்கை கருத்துரிமைக்கு எதிரான செயல் என்று கருத்துகள் எழுந்துள்ளது.
கல்வி, கலாசாரம், அறிவியல், பண்பாடு, வரலாறு, கலை போன்ற பிரிவுகளில் படைப்புகளை வெளியிட முன் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதால் பதிவாளரின் இந்த சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழகத்தின் குறும்பட போட்டி: பழங்குடியின மாணவர்களின் படத்திற்கு பரிசு!