சேலம்: சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனின் மகன் சுதர்சன்பாபுவிற்கும் சுதா என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு தற்போது 13 வயதில் ஒரு மகள் உள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சுதா சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், திடீரென அவரது உடல்நலம் மிகவும் மோசமடைந்ததால் முதல் சிகிச்சைக்காக சின்னக்கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சுதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். சுதாவின் இறப்பு குறித்து தகவலறிந்து, அரசு மருத்துவமனையில் குவிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், சுதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சுதர்சன்பாபு வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டு சுதாவிற்கு சரிவர உணவு கொடுக்காமல், மருத்துவ சிகிச்சை வழங்காமல், அவ்வப்போது குடித்துவிட்டு வந்து அடித்து துன்புறுத்தியதால் அவரின் உடல்நிலை மிகவும் மோசமாகி உயிரிழந்ததாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
எனவே திமுகவைச் சேர்ந்த சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் அவரின் மனைவி உள்ளிட்ட உறவினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாரை வலியுறுத்தி கேட்டுக் கொண்டனர். மேலும் போலீசார் சுதாவின் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து அவரது உயிரிழப்புக்கு காரணமான மேயர் ராமச்சந்திரன், அவருடைய மனைவி, மகன் மற்றும் மகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை சுதாவின் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: திமுக வட்ட செயலாளர் கொலை வழக்கு: பிடிஆணையில் தலைமறைவான 3 பேர் கைது - சிக்கியது எப்படி?