சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காந்திமதி, சடையம்மாள். மேலும் மஞ்சினி பகுதியைச் சேர்ந்தவர் மருதாம்பாள். அதேபோல் தென்னங்குடிபாளையத்தைச் சேர்ந்தவர் சுந்தரம். இவர்கள் கடந்த நவ.4ஆம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, கலைஞர் கனவு இல்லம், சாக்கடை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்து மனு அளித்திருந்துள்ளனர்.
குப்பைத் தொட்டியில் மனு: இந்த மனுக்கள் மீது மனு எண் குறிப்பிட்டு, ‘சீல்’ வைத்து, ஆத்தூர் ஒன்றிய பிடிஓக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் இவர்களது மனுக்கள் உள்பட 10க்கும் மேற்பட்ட மனுக்கள் கடந்த நவ.6ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் கிடந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பூட்டியிருந்த வீடு.. சுவிட்ச் ஆஃப் ஆன ஃபோன்.. நடிகை கஸ்தூரிக்கு சம்மன் கொடுக்க சென்ற போலீசார் ஏமாற்றம்!
அதனைக் கண்ட சின்ன சேலம் பகுதியைச் சேர்ந்த வீராசாமி என்பவர் அந்த மனுவைப் பிரித்து பார்த்து, அதில் இருந்த செல்போன் நம்பருக்குத் தொடர்பு கொண்டு, மனு குப்பையில் கிடப்பது குறித்து தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த மனுதாரர் அவரிடம் கீழே கிடந்த மனுக்களை அனுப்பும்படி கேட்டுள்ளார். அதையடுத்து,அந்த நபர் தபால் மூலம் குப்பையில் கிடந்த மனுக்களை அனுப்பி வைத்துள்ளார்.
தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரி: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த மனுக்கள், வேறு மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலைய குப்பைத் தொட்டிக்கு எப்படி சென்றிருக்கும் என அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இதுகுறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி மனுவினை கவனக்குறைவாகக் கையாண்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்ராஜை தற்காலிக பணிநீக்கம் செய்து நேற்று (நவ.10) உத்தரவிட்டார். இந்த விவகாரம் சேலம் மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.